போத்தனூர்;குறிச்சி பகுதி தி.மு.க., வில், பொறுப்பாளர்கள் மற்றும் அதிருப்தியாளர்கள் இணைந்து, 'தளபதி அணி'யை துவக்கியுள்ளனர்.கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க.,விற்கு உட்பட்டது குறிச்சி பகுதி. பொறுப்பாளராக, தொண்டாமுத்தூர் தொகுதியை சேர்ந்த சேனாதிபதி உள்ளார். இவர் குறிச்சி பகுதியில், பல்வேறு பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.இதில், கட்சிக்காக பாடுபடுவோர், மூத்த நிர்வாகிகளை புறக்கணித்துள்ளதாக கூறி, அவரை கண்டித்து, அதிருப்தியாளர்கள், மாவட்ட பிரதிநிதி நிசார் அகமது தலைமையில், ரகசிய கூட்டம் நடத்தினர். கூட்டத்தில், குறிச்சி தெற்கு பகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், 'கட்சியை அ.தி.மு.க., விடம் அடகு வைக்க நினைப்போருக்கு, துணை நிற்கமாட்டோம்' என பேசினார்.இதையடுத்து, கட்சிக்கு துரோகம் செய்வோரை தலைமைக்கு அடையாளம் காட்டும் வகையில் செயல்பட, 'தளபதி அணி' எனும் அமைப்பை துவக்கியுள்ளனர். தலைவராக நிசார் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் கூறுகையில், ''குறிச்சி பகுதி, தி.மு.க., வின் கோட்டை என பெயர் பெற்றது. இதன் மாவட்ட பொறுப்பாளர், கட்சி தொண்டர்களிடையே அறிமுகம் இல்லாதவர்.''இவரது செயல்பாடுகளால் பலர் கட்சியை விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலை மாறவும், தலைமைக்கு உண்மை நிலவரத்தை தெரியப்படுத்தவும், தளபதி அணியை துவக்கியுள்ளோம். சட்டசபை தேர்தலில், தொண்டர்களுக்கும், மக்களுக்கும் அறிமுகமானவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதே எங்களின் முக்கிய கோரிக்கை,'' என்றார்.'ராஜினாமா செய்ய தயார்'குற்றச்சாட்டுகள் குறித்து, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி கூறியதாவது:கடந்த ஐந்து மாதங்களாக, என் வீடு தேடி வரும் தொண்டர்களிடம் கேளுங்கள். பணம் வாங்கி பொறுப்பு போட்டுள்ளேன் என நிரூபித்தால், எனது பொறுப்பிலிருந்தே ராஜினாமா செய்ய தயார். எனக்குள்ள சொத்தே அதிகம். பொறுப்பாளர்கள் யாரையும் நீக்கவில்லை. மாவட்ட அளவில் பொறுப்பு கொடுத்துள்ளேன். அவர்கள் பணியில் சுணக்கம் காட்டியதால், பணி செய்யக்கூடிய வர்களை போட்டுள்ளேன். அ.தி.மு.க.,வினருடன் தொடர்புடைய யாருக்கும் பொறுப்பு போடவில்லை,'' என்றார்.கட்சியின் தலைமை கண்டித்துள்ளதாக வந்த தகவல் குறித்து கேட்டதற்கு, ''கட்சி தலைமை கூறுவதை என்னால் சொல்ல முடியாது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE