இந்தியா விவசாய நாடாக உள்ளது. பயிர் சாகுபடி காலத்தில் பருவம் தவறினால், எதிர்பாராத இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை விவசாயிகளால் எதிர்கொள்ள முடியாமல் போகிறது.
அது போன்ற சூழ்நிலைகளில், காப்பீட்டுத் திட்டம் மூலம் விவசாயிகளை இந்தப் பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற வேண்டியது அவசியமாகிறது. ஒரு தேசம், ஒரே திட்டம் என்ற அடிப்படையில் பிரதமரின் பசல் பீமா திட்டத்துக்கு, 2016 ஜனவரி 13ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. சாகுபடி இழப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு உயர் முன்னுரிமை அளித்து, அப்போது அமலில் இருந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களின் குறைபாடுகளை நீக்கும் வகையில் புதிய காப்பீட்டுத் திட்டம் இருந்தது.பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2016 ஏப்ரல் மாதம், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
காப்பீட்டு தொகை
இழப்பீடு கோரும் விவசாயிகளுக்கு, விரைவாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது, இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது. ஒரே மாதிரியான குறைந்தபட்ச சந்தா, வெளிப்படைத் தன்மை, நஷ்டஈடு கோரும் மனுக்களை மதிப்பீடு செய்தல், செயலூக்கம் கொண்ட குறைதீர்ப்பு நடைமுறை, தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான அணுகுமுறை போன்ற, விவசாயிகளுக்கு ஏற்ற வகையிலான மாறுதல்கள் இத் திட்டத்தில் செய்யப்பட்டன.விவசாயிகளின் நலன்களை மனதில் கொண்டும், மாநிலங்களின் தேவைக்கு ஏற்பவும் பிரதமரின் பசல் பீமா திட்டத்தின் அம்சங்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளும் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் இத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகளுடன் நீண்ட காலத்துக்கு தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுக் காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளன. நிறைய விவசாயிகள் பயன் பெற வேண்டும் என்பதற்காக ஊராட்சி ஒன்றிய அளவில், தீவிர விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மொத்த சந்தாவில், 0.5 சதவீதத்தை காப்பீட்டு நிறுவனங்கள் ஒதுக்கியுள்ளன. பயிரின் உற்பத்தி விலையின் மதிப்புக்கு இணையாக காப்பீட்டுத் தொகை அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இழப்பின் தன்மைக்கு ஏற்ப விவசாயிகளுக்குப் போதிய நிவாரணம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரச்னைகளை எதிர்கொள்ள கூடுதல் அம்சங்களை விருப்பத்தின் அடிப்படையில் மாநிலங்கள் சேர்த்துக் கொள்ளவும் இதில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நேரடி உதவி
அதிக விவசாயிகள் இதில் பங்கேற்பதற்கு ஊக்குவிக்கும் வகையில், வடகிழக்கு மாநிலங்களில் மத்திய மாநில அரசுகள் 50:50 என்ற அளவில் மானியம் அளிப்பதை 90:10 என மத்திய அரசு உயர்த்தியுள்ளது.பல கோடி விவசாயிகள், 1.7 லட்சம் வங்கிக் கிளைகள், 44 ஆயிரம் பொது சேவை மையங்களை இணைக்கும் சவாலை கருத்தில் கொண்டு, தேசிய பயிர்க் காப்பீட்டு முனையம் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் நில ஆவணங்களுடன் அது இணைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களின் இருப்பிடத்தில் இருந்தே இத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள தேசிய பயிர்க் காப்பீட்டு செயலி வசதி செய்து தருகிறது.ஆதார் அடிப்படையில் சரிபார்த்தல் செய்வது 2017-ல் கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து இத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரித்தது. அதனால் விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக உதவிகளைப் பெறுகின்றனர். புரட்சிகரமான இந்த முன்முயற்சி, போலி பயனாளிகளை நீக்கி, உரிய காலத்தில் நிவாரணங்கள் அளிக்கப்படுவதை உறுதி செய்யப்படுகிறது.2019 காரீப் பருவம் வரையில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு சந்தா செலுத்திய நிலையில், விவசாயிகளுக்கு ரூ.86 ஆயிரம் கோடி அளவுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
பசல் பீமா
அதாவது சந்தாவைவிட ஐந்து மடங்கு அதிகமாக விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைத்திருக்கிறது.விவசாயிகள் 100 ரூபாய் சந்தா செலுத்தியிருந்தால் 537 ரூபாய் அளவுக்கு நிவாரணம் பெற்றிருக்கிறார்கள்.சாகுபடி நட்டம் ஏற்பட்டால், உரிய காலத்தில் போதிய நிவாரணம் அளிப்பதன் மூலம் விவசாயிகள் தற்சார்பு பெறுவதற்கு பிரதமரின் பசல் பீமா திட்டம் உதவியுள்ளது. இந்த ஐந்து ஆண்டு காலப் பயணத்தில், 29 கோடி விவசாயிகளுக்குக் காப்பீட்டு வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 5.5 கோடிக்கும் அதிகமானவர்கள் இதில் பதிவு செய்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் நஷ்டஈடு கோரிய விவசாயிகளுக்கு ரூ.90 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய காப்பீட்டுத் திட்டத்துடன் ஒப்பிடும்போது, காப்பீட்டுத் தொகை ஹெக்டருக்கு ரூ.15,100 என்பதில் இருந்து ரூ.40,700 ஆக உயர்ந்துள்ளது.
கடன் பெறாத விவசாயிகள் இதில் பதிவு செய்யும் அளவு இத் திட்டத்திற்கு முன்பு 6 சதவீதம் என்ற நிலையில் இருந்து 2019-20-ல் 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கோவிட்19 பெருந்தொற்று பாதிப்பை அடுத்து முடக்கநிலை அமல் செய்யப்பட்ட காலத்தில் நஷ்டஈடு கோரும் மனுக்களுக்கு, 70 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.8741 கோடி அளவுக்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் சாகுபடி பருவத்துக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மகாராஷ்டிராவில் அறுவடைக்குப் பிந்தைய காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கப் பட்டுள்ளது.
அரசு உறுதி
பயிர்க் காப்பீட்டு முனையம் 10 பிராந்திய மொழிகளில் உள்ளது. எனவே விவசாயிகள் நேரடியாக இதில் பதிவு செய்து கொள்ளலாம். தங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, சந்தாத் தொகை மற்றும் தங்களின் நஷ்டஈடு மனுவின் நிலை ஆகியவற்றை விவசாயிகளே பார்த்துக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் போன்களில் தேசிய பயிர்க் காப்பீட்டு செயலி இருப்பதால், தங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை விவசாயிகள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின் வழிகாட்டுதல்களில் கூறியுள்ள பாதிப்பு ஏதும் நிகழ்ந்தால் 72 மணி நேரத்துக்குள் அதைப் பதிவு செய்யவும் இது உதவியாக உள்ளது. நஷ்டஈடு கோரும் மனுக்களை செம்மையாகக் கையாள உதவும் வகையில், 'ரிமோட் சென்சிங், ஸ்மார்ட் சாம்பிள்' போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் இத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, நஷ்டஈடு தருவதில் வெளிப்படைத் தன்மை, விவசாயிகள் விழிப்புணர்வு, குறைகளை உரிய காலத்தில் தீர்த்து வைத்தல், நஷ்ட ஈடு தொகையை விரைவாக வழங்குதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, வரக்கூடிய காலங்களில் இத்திட்டத்தை மேலும் சிறப்பாக அமல் செய்வதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
நம் கனவு
இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு பயிர்கள் நாசமானால், பாதிப்புகளைக் குறைப்பதற்கு இத் திட்டம் உதவிகரமாக உள்ளது. எனவே, கடன் வாங்காத எல்லா விவசாயிகளுக்கும் இத் திட்டம் விருப்பத்தின் அடிப்படையிலானது என்றாலும், விவசாயிகள் பெருமளவில் இத் திட்டத்தில் சேர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இத்திட்டத்துடன் இணைந்திருப்பது என்பது, நெருக்கடியான நேரங்களில் தற்சார்பாக இருத்தல் என்பதாக இருக்கும். ஒவ்வொரு விவசாயியும் தற்சார்பு பெற வேண்டும் என்பது தான் நமது கனவாக உள்ளது.
நரேந்திர சிங் தோமர்
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE