சென்னை:புனேயில் இருந்து, ஐந்து லட்சத்து, 36 ஆயிரத்து, 500, 'கோவிஷீல்டு' தடுப்பு மருந்துகள், தமிழகம் வந்துள்ளன. மாவட்ட வாரியாக பகிர்ந்தளிக்கப்பட்டு, வரும், 16ம் தேதி முதல், தடுப்பூசி போடப்பட உள்ளது.
கொரோனா தடுப்பு மருந்துகளை, நாடு முழுதும் உள்ள பொது மக்களுக்கு செலுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசு, அனைத்து மாநில சுகாதார துறையினருடன் இணைந்து எடுத்து வருகிறது.
16ம் தேதி முதல்இதற்காக, நாடு முழுதும், தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடைபெற்றது. இந்நிலையில், நாடு முழுதும் உள்ள, சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு, முதல் கட்டமாக, 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்காக, மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள, சீரம் நிறுவனத்தில் இருந்து, டில்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, விமானம் வாயிலாக தடுப்பூசி அனுப்பப்பட்டது. அந்த வகையில், நேற்று காலை, 10:30 மணியளவில், புனேயில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு, ஐந்து லட்சத்து, 36 ஆயிரத்து, 500 'டோஸ்'கள், கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வந்தன.
இந்த தடுப்பு மருந்துகள், விமான நிலையத்தில் இருந்து, வாகனம் வாயிலாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டன.ஆய்வுபின், அங்கிருந்து, 10 சுகாதார மண்டலங்கள் வாயிலாக, அந்தந்த மாவட்டங்களுக்கு, நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
பின், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:முதற்கட்டமாக, புனே, சீரம் நிறுவனம் தயாரித்த, ஐந்து லட்சத்து, 36 ஆயிரத்து, 500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து, 45 பெட்டிகளில், சென்னை வந்தடைந்தது. அவை, 10 மண்டல கிடங்குகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.
விபரங்கள்:அதேபோல், 20 ஆயிரம் டோஸ்கள், கோவாக்சின் மருந்து வர உள்ளது. 'கோவின்' செயலியில் தடுப்பு மருந்து செலுத்துபவரின் விபரங்கள் இருக்கும். தடுப்பு மருந்து முதல் முறையாக செலுத்திய பின், பயனாளியின் மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும். அதைதொடர்ந்து, 28 நாட்களுக்கு பின், இரண்டாம் முறை தடுப்பூசி செலுத்தப்படும்.
அதன்பின், முழுமையாக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.இதுவரை, 4.50 லட்சம் முன்கள பணியாளர்கள், தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துஉள்ளனர். தடுப்பூசி வந்தாலும், பொது மக்கள் முக கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE