கோவை:கோவை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் பட்டியலை, அலுவலகத்தில் சமர்ப்பிக்க, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதனால், சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ள, மாநகராட்சி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் - 1973 விதி எண்: 7-ன் படி, அரசு பணியாளர்கள் தங்களது பெயரிலோ, குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கியிருப்பது; விற்பனை செய்வது; காலிமனை வாங்கும்போது, அதற்கான நிதி ஆதாரம் சமர்ப்பிப்பது போன்ற விதிமுறைகளை, பின்பற்ற வேண்டும்.பணியில் சேர்ந்த காலத்தில், தமக்கிருந்த சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை, அறிக்கையாக சமர்ப்பித்திருக்க வேண்டும். அதேபோல், ஐந்தாண்டுக்கு ஒருமுறை சொத்துகள் மற்றும் கடன் விவர அறிக்கை அளிக்க வேண்டும்.
ஆனால், பலரும் சொத்து பட்டியல் சமர்ப்பிப்பதில்லை.அதனால், உடனடியாக, அசையும் மற்றும் அசையா சொத்து பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சொத்துக்கள் இல்லையெனில், 'இல்லை' என குறிப்பிட்டு, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், அதிகாரிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதன் விவரம்:தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் - 1973 விதி எண்: 7- (3)ன் படி, மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை, படிவத்தில் குறிப்பிட்டு உடனடியா சமர்ப்பிக்க வேண்டும். சொத்துக்கள் இல்லையெனில், இல்லை என தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, கமிஷனர் கூறியுள்ளார்.இதன் காரணமாக, அசையும்/ அசையா சொத்துகளாகவும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் ஏராளமான சொத்துக்கள் வாங்கிக்குவித்துள்ள, மாநகராட்சி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE