திருநெல்வேலி:'பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து, அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது, ஓராண்டாகியும், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை' என, பா.ஜ.,வினர் அதிருப்தி தெரிவித்தனர்.
திருநெல்வேலி, மேலப்பாளையத்தில், 2019 டிச., 29ல், எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் நடத்திய குடியுரிமை திருத்த சட்ட விளக்க கூட்டத்தில், பேச்சாளர் நெல்லை கண்ணன் பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து, அவதுாறாக பேசினார். அப்போதைய நெல்லை மாவட்ட, பா.ஜ., தலைவர் தயாசங்கர் புகார்படி, மேலப்பாளையம் போலீசார், நெல்லை கண்ணன் மீது, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
பெரம்பலுாரில் தனியார் விடுதியில், நெல்லை கண்ணன் தங்கியிருந்த போது, 2020 ஜன., 2ல் கைது செய்யப்பட்டு, திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.பின், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், தினமும் இரு முறை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமினில், ஜன., 11ல் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்து ஓராண்டாகியும், இவ்வழக்கில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து, தயாசங்கர் கூறுகையில், ''போலீசார், நெல்லை கண்ணனை கைது செய்ததோடு சரி. இவ்வழக்கை கிடப்பில் போட்டு விட்டனர். இன்று வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதனால், எங்கள் கட்சியினர் வேதனை- அடைந்து உள்ளனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE