நாகர்கோவில்:''தி.மு.க.,வில் இருந்தபோது, என் வீட்டில் சிலர் கல் எறிந்தனர்; எறிய சொன்னதே ஸ்டாலின் தான்,'' என, நடிகை குஷ்பு குற்றம் சாட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த, பா.ஜ.,வின் பொங்கல் விழாவில் குஷ்பு பேசியதாவது:காங்கிரசில் குடும்ப அரசியல் உள்ளது. இவர்களும் வேலை செய்ய மாட்டார்கள்; மற்றவர்களையும் வேலை செய்ய விடமாட்டார்கள்.தீபாவளி, பொங்கல் பண்டிகையை, நாம் குடும்பத்தோடு கொண்டாடுவோம். முஸ்லிம் பெண்ணான நான், பொட்டு வைப்பதில் பெருமை கொள்கிறேன்.
மதம் பெரிது கிடையாது. ஆனால், ஒரு மதத்துக்கு எதிராக செயல்படுவது தான் தவறு. திருமாவளவன், ஹிந்து மதத்துக்கு எதிராக பேசுகிறார். நான் திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால், முஸ்லிம் மதத்துக்கு எதிராக குரல் கொடுத்து பாருங்கள். பா.ஜ., சிறுபான்மை மதத்திற்கு எதிரானது அல்ல.
2019-ல் பா.ஜ., வெற்றி பெற முஸ்லிம், கிறிஸ்துவ மக்களும் ஓட்டு போட்டனர்.தி.மு.க., ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் தி.மு.க.,வில் இருந்தபோது, என் வீட்டில் கல் எறிந்தனர். வீட்டில் இருந்த குழந்தைகள் கதறினர். பதறிப்போய் ஸ்டாலினை பார்க்க போனேன். அவரை பார்க்க முடியவில்லை.
வீட்டில் கல் வீச கூறியதே ஸ்டாலின் தான் என்பது தெரிந்தது. நான் பா.ஜ.,வுக்கு வந்ததால், பாதுகாப்பாக இருக்கிறேன்.இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், பா.ஜ., மாநில தலைவர் முருகன், 'மாஜி' மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE