ஈரோடு:''தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என உங்களைப்போல நானும் கூறுகிறேன். அதற்காக உங்களது தொண்டனாக செயலாற்றுகிறேன்'' என மக்கள் நீதி மைய தலைவர் கமல் பேசினார்.
ஈரோட்டில் மக்கள், வணிகர்கள் சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு நகரமும் தலைநகருக்கு நிகரானதாக மாற வேண்டும். சென்னையில் தான் தொழில் முனைவோராக முடியும் என்பதை மாற்றி இருக்கும் இடத்தில் தொழில்களை செய்யும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு நாம் 'நேர்மையான அரசியல் செய்வேன்' எனக்கூறும் துணிச்சல் வேண்டும்.
செயல்முறைகளின் ஆதாரங்களை வாக்குறுதியாக பேசுகிறோம். அதனால்தான் எங்களது முதல் கொள்கையாக நேர்மையை ஏற்றுள்ளோம். இருந்தும் எங்கள் கட்சியின் கொள்கை தயாராகி வருகிறது. நம் தலைமுறை வீதிகளின் சாக்கடையில் வாழ்வதை பார்க்க முடிகிறது. அடுத்த தலைமுறைக்காவது மாற்றம் வர வேண்டும்.
மக்கள் வீட்டிலிருந்தபடி லேப்டாப்பில் விண்ணப்பங்களை அனுப்பி பலன் பெற வேண்டும். அதற்காக மடிக்கு ஒரு கணினி இலவசமாக வழங்க இயலாது. குடும்பத்துக்கு ஒன்றாக வழங்கி தேவை நிறைவேற்ற செய்வோம்.படித்து வேலை இல்லை என்ற நிலைக்கு மாற்றாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி அவர்களே வேலை வழங்கும் நிலைக்கு உயர்த்துவோம். அனைவரும் கூடி தேர் இழுப்போம். வடமாக நானிருப்பேன். உங்கள் நேர்மையான இழுப்புக்கெல்லாம் நான் வருவேன், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE