நாமக்கல்:பறவை காய்ச்சல் எதிரொலியால், முட்டை நுகர்வு சரிந்துள்ளது. இதனால், குளிர்பதன கிடங்கில் முட்டைகளை சேமித்து வைக்கும் முயற்சியில், பண்ணையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில், 1,100 பண்ணைகளில் வளர்க்கப்படும், ஐந்து கோடி கோழிகள் மூலம், தினமும், நான்கு கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், 1.50 கோடி முட்டை, கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், கேரளா மாநிலம் கோட்டயம், ஆலப்புழா பகுதிகளில், பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கோழி, முட்டை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக, நாமக்கல் மண்டலத்தில், முட்டைகள் தேக்கம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.தேக்கத்தை தவிர்க்க, பண்ணையாளர்கள், 'நெக்' நிர்ணயம் செய்யும் கொள்முதல் விலையில் இருந்து, 50 காசு வரை குறைத்து, வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களை தொடர்ந்து, மஹாராஸ்டிரா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில், பறவை காய்ச்சல் நோய் பரவி உள்ளது.
இதனால், இந்திய அளவில் முட்டை, கோழி நுகர்வு கடுமையாக சரிந்து, வடமாநிலங்களுக்கு முட்டை அனுப்புவதும் தடைபட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்திலும் முட்டை நுகர்வு குறைந்துள்ளது. அதனால், பண்ணையாளர்கள், தினமும் உற்பத்தி செய்யும் முட்டைகளை, குளிர்பதன கிடங்கில் சேமிக்க துவங்கி உள்ளனர்.
நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில், 15 கோடி முட்டை மட்டுமே குளிர்பதன கிடங்கில் சேமிக்க முடியும். தற்போது, குளிர் காலம் என்பதால், ஒரு வாரம் வரை முட்டைகள் கெட்டுப்போக வாய்ப்பு இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE