சென்னை:தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்தார்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் முல்லைவேந்தன்; முன்னாள் அமைச்சர். கடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ம.க., சார்பில், தர்மபுரியில் போட்டியிட்ட அன்புமணி, இவரை சந்தித்து ஆதரவு கேட்டார்.அதைத் தொடர்ந்து, முல்லைவேந்தன், தி.மு.க.,வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவரை மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்க, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் முயற்சி எடுத்தனர்.
இந்நிலையில், நேற்று அவர், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுடன், முதல்வர் பழனிசாமியை , அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.அப்போது, தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர் மேலாண்மை திட்டங்கள்; விவசாயிகள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை, விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்தார். முல்லைவேந்தன் திடீரென முதல்வரை சந்தித்ததை தொடர்ந்து, அவர், அ.தி.மு.க.,வில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE