அவனியாபுரம்:'ஏ தொட்டு பாரு... தொட்டு பாரு... மச்சக்களை மிரட்டுது பாரு... ஆஹா... சூப்பர் மாடு... ஒரு தங்க காசு மாட்டுக்காரர்க்கு... மதுரை சிங்கமுடா விடாத... பிடி... ஆஹா, மாடு பிடிபட்டது... வீரனுக்கு ஒரு கார் பரிசு'... கொரோனாங்குற வார்த்தையை கேட்டு, பீதியில் இருக்கும் நமக்கு இது போன்ற உற்சாக வார்த்தைகளால் புத்துணர்ச்சி தர தயாராக உள்ளது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களம்.
காளையர்களும், காளைகளும் களமாடும் வேகத்தில் கொரோனா அடங்கட்டும் என கடவுளை வணங்கி நாளை (ஜன.,14) களத்திற்கு கிளம்புவோம்...மதுரை அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் ரோட்டில் ஜல்லிக்கட்டு களத்திற்கு முன் தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. வாடிவாசல் அருகில் வி.ஐ.பி., பிற பார்வையாளர்களுக்கான கேலரி அமைக்கப்பட்டுள்ளது. காளைகள் ஓடும் பகுதியான அவனியாபுரம் மெயின் ரோட்டின் இருபுறம் மூங்கில் தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் வரை மூங்கில் தடுப்பில் இரும்பு தடுப்பு வலை கட்டப்பட்டு உள்ளது. போட்டியின் போது வீரர்கள், காளைகளுக்கு காயம் ஏற்படாமல் இருக்க கீழே தேங்காய் நார் பரப்பப்படுகிறது. கொரோனா சூழலுக்கு பின் மக்களை மகிழ்விக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் 431 வீரர்கள், 788 காளைகளை அடக்க களமிறங்குகிறார்கள்.
வீரர்கள், காளை உரிமையாளர், உடன் வருவோருக்கு கொரோனா பரிசோதனைக்கு பின் உடல் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. போட்டிக்கு வரும் வீரர்கள், காளைகளுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும். காயம் ஏற்படும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு டாக்டர்கள் குழு, காளைகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு கால்நடை துறையினர் தயாராக இருப்பர்.
அரசு அலுவலர்கள், அதிகாரிகள் கண்காணிப்பர். 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். போட்டி காலை 8:00 மணி - மாலை 4:00 மணி வரை நடக்கிறதுபாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு ஜன., 15 மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 651 வீரர்கள், 783 காளைகள், ஜன., 16 அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் 655 வீரர்கள், 700 காளைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போட்டி நேரம் காலை 8:00 மணி - மாலை 4:00 மணி வரை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE