உடுமலை;பாசனக்கால்வாய் குப்பை கொட்டுமிடமாக மாறியுள்ளதை தடுக்க, அரசுத்துறையினர் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., பாசனத்திட்டம், உடுமலை கால்வாயில், நான்கு மண்டல பாசனத்துக்கும் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், இந்த கால்வாய் உடுமலை நகர எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. மேலும், பள்ளபாளையம், போடிபட்டி, கணக்கம்பாளையம் போன்ற ஊராட்சி குடியிருப்புகளின் அருகிலேயே கால்வாய் செல்கிறது. இப்பகுதிகளில், குப்பைகளை நேரடியாக பாசன கால்வாயில் கொட்டுகின்றனர்.ஊராட்சி நிர்வாகத்தினர், தேவையான இடங்களில் குப்பைத்தொட்டி வைப்பதில்லை. கால்வாயை ஒட்டி குவிக்கப்படும் கழிவுகளையும் முறையாக அகற்றுவதில்லை.இதனால், பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் போது, கழிவுகள் அடித்துச்செல்லப்பட்டு, பல்வேறு இடங்களில் தேங்குகிறது. குறிப்பாக, கால்வாய் பாலம், பகிர்மான ஷட்டர்களில் தேங்கும் கழிவுகளால், தண்ணீர் சீராக செல்லாமல் தேங்கி கரையும் பாதிக்கிறது.சாகுபடிக்கு தண்ணீர் பாய்ச்சும் போது, அதில் அடித்து வரப்படும் பல்வேறு கழிவுகளால், மண் வளமும் பாதிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மூன்றாம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்காலிக பராமரிப்பு பணிகளையாவது உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.பாசனக்கால்வாய் குப்பைத்தொட்டியாக மாறியுள்ளதை தடுக்க, பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE