உடுமலை:தொடர் மழையால், கொண்டைக்கடலை சாகுபடி பலத்த சேதமடைந்துள்ளதால், வேளாண்துறையினர் நிவாரணத்துக்கு பரிந்துரைக்க, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, கொண்டைக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு, கணபதிபாளையம், அந்தியூர், கொங்கல்நகரம், பண்ணைக்கிணறு உட்பட பல கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கரில், பிரதானமாக இது விதைக்கப்பட்டது.இச்சாகுபடியில், செடியின் வளர்ச்சி தருணத்தில், பனிப்பொழிவு இருக்க வேண்டும். அப்போதுதான், பூக்கள் உதிராமல், திரட்சியாக காய்கள் பிடிக்கும். ஆனால், நடப்பு சீசனில், வழக்கத்துக்கு மாறாக, பனிப்பொழிவு இருக்க வேண்டிய தருணத்தில், தொடர் மழை பெய்து வருகிறது.இதனால், செடிகளில், பூக்கள் முற்றிலுமாக உதிர்ந்துள்ளது. செடிகளின் வளர்ச்சி அதிகமாக இருந்தும், பூ இல்லாததால், விளைச்சல், முற்றிலுமாக இருக்காது; மேலும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில், செடிகள் அழுகி வருகிறது. அதிக ஈரம் காரணமாக, செடிகளில், நோய்த்தாக்குதலுக்கு, மருந்து கூட தெளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.விவசாயிகள் கூறியதாவது: மானாவாரி விளைநிலங்களில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இச்சாகுபடியில், கிடைக்கும் வருவாயே பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. நடப்பு சீசனில், கூடுதல் மழையால், செடிகள் அழுகி, பூக்கள் உதிர்ந்து, நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பாதிப்பின் தன்மை குறித்து, வேளாண்துறையினர் நேரடியாக கள ஆய்வு செய்து, நிவாரணம் பெற்றுத்தர அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக மானாவாரி சாகுபடியில், நஷ்டமே ஏற்பட்டு வருகிறது.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE