உடுமலை;நீர்பிடிப்பு பகுதிகளில், பெய்து வரும், தொடர் மழையால், அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், உபரி நீர் வெளியேற்றம் கூடுதலாக்கப்பட்டுள்ளது.உடுமலை அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகள், மேற்குத்தொடர்ச்சி மலையில், 861 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. கடந்தாண்டு, 'புரெவி' புயல் தாக்கத்தால், நீர்பிடிப்பு பகுதியான கேரள மறையூர் சுற்றுப்பகுதியில் கனமழை பெய்ததால், நீர் வரத்து அதிகரித்து, டிச., 5ல், மூன்றாவது முறையாக, அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.நிலையான நீர் வரத்து காரணமாக, அணையின் நீர் மட்டம், அம்மாதம் முழுவதும் முழு கொள்ளளவிலேயே இருந்தது. பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டும், அணை நீர் மட்டம், 90 அடியில், 80 அடிக்கு குறையாமல் இருந்தது.இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு முதல், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால், நீர் வரத்து பல மடங்கு அதிகரித்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, அணையிலிருந்து, வினாடிக்கு, 1,446 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைப்பகுதியில், 39 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது.பகலிலும், நீர் வரத்து கூடுதலாக இருந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்தது. நேற்று இரவு, 8:00 மணிக்கு வினாடிக்கு, 3,978 கனஅடி நீர் வரத்து இருந்தது; எனவே, அணையிலிருந்து ஆற்றில், உபரி நீர் வெளியேற்றம், வினாடிக்கு, 4,047 கன அடியாக, அதிகரிக்கப்பட்டது.அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், அணைக்கு நீர் வரத்து, வெளியேற்றம் ஆகியவற்றை, பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE