பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே வெற்றிலை காளிபாளையம் வந்து கொண்டிருந்த இரண்டு டவுன் பஸ்களை மீண்டும் இயக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.துடியலுாரை அடுத்து அசோகபுரம் உள்ளது. இங்கிருந்து காந்திபுரம், உக்கடம் மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளுக்கு வெற்றிலைகாளிபாளையம் பகுதியிலிருந்து, 38ஏ மற்றும், 4ஏ என்ற இரண்டு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அதிகாலை, 5.15 மணிமுதல் இரவு, 10.30 மணி வரை எட்டு நடைகள் பஸ்கள் சென்று வந்தன. இதில், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர் வேலைக்கு செல்பவர்கள் என, நுாற்றுக்கணக்கானோர் பயணம் செய்தனர். என். ஜி.ஜி.ஓ., காலனி, ஸ்டேட் பேங்க காலனி, வெற்றிலைகாளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த இரண்டு டவுன் பஸ்கள் மட்டுமே சென்று வந்தன.கொரோனாவுக்கு பிறகு ஒரு டவுன் பஸ் மட்டும் வந்தது. ஆனால், தற்போது கடந்த ஒரு மாதமாக, 38ஏ மற்றும், 4ஏ என்ற இரண்டு பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் வேலைக்கு செல்பவர்கள் நீண்ட தூரம் நடந்து, மேட்டுப்பாளையம் சாலையை பிடித்து, அங்கிருந்து பஸ் பிடித்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. நிறுத்தப்பட்ட, 2 டவுன் பஸ்களையும் மீண்டும் உடனடியாக போக்குவரத்து துறையும் கழகமும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால், துடியலூரில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு நல சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE