போடி : போடியில் பெய்து வரும் மழையால் மீனாட்சியம்மன் கண்மாயில் தண்ணீர் நிரம்பியுள்ளது. சுற்றுலா பயணிகளை கவர படகு சவாரி துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போடி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சியில் உள்ளது மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய். 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாயில் தண்ணீர் தேங்குவதன் மூலம் சுந்தரராஜபுரம், விசுவாசபுரம், அம்மாபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி, பத்ரகாளிபுரம், மீனாட்சிபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட கிராம கிணறுகளில் தண்ணீர் பெருகுவதோடு 450 ஏக்கருக்கு மேல் பாசன வசதி கிடைக்கிறது.போடி குரங்கணி, கொட்டகுடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் மீனாட்சியம்மன் கண்மாய் நிரம்பியுள்ளது. இக்கண்மாயில் ஆண்டு தோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை முக்குளப்பான், பாம்புதாரா, கூழைக்கிடா, மஞ்சள் மூக்குநாரை, பிளமிங்கோ உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள், கடல்சார்ந்த கொக்குகளும் இரைதேட வரும்.
மரங்களில் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் மேற்கொள்ளும். ஏப்ரல், மேயில் சொந்த பகுதிகளுக்கு சென்று விடும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மரங்களை அகற்றியதால் பறவைகள் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பறவைகள் தங்க கண்மாய் ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டுவளர்ப்பதோடு தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இயற்கை அழகை கண்டு ரசிக்கவும், அரசுக்கும் வருமானம் கிடைக்கும் வகையிலும் விரைவில் படகு சவாரி துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE