தேனி : வரத்து குறைவால் தேனியில் வெண்டைக்காய் விலை கிலோ ரூ.60 ஆக உயர்ந்தது.தேனி, ஆண்டிபட்டி தாலுகாக்களில் வெண்டைக்காய் சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது.
2020 நவம்பரில் விளைச்சல் அதிகரிப்பால் கிலோ ரூ.2க்கு வாங்க ஆள் இன்றி விவசாயிகள் வெண்டையை முல்லை பெரியாற்றில் கொட்டினர். தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. வெண்டை விலை ஏறுமுகத்தில் உள்ளது. தேனி காய்கறி கமிஷன் கடைகளுக்கு வரத்து குறைந்துள்ளது. முன்னர் தினசரி 200 மூடைகள் வந்தது. தற்போது 50 மூடைகளுக்கு குறைவாக வருகிறது. மொத்த விலையில் கிலோ ரூ.50 வீதம் 80 கிலோ மூடை ரூ.4000 வரை விற்கிறது. சில்லரை வியாபாரிகள் வாங்கி கிலோ ரூ.60 வரை விற்கின்றனர். விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி ஜான் பென்னிகுவிக் காய்கறி கமிஷன்கடை தலைவர் சந்திரன் கூறுகையில் '' வெண்டை வரத்து குறைவால் விலை உயர்ந்து வருகிறது. தினமும் 50க்கும் குறைவான மூடைகள் வருவதால் வியாபாரிகள் கேரளா, ஒட்டன்சத்திரம் வாங்கி செல்கின்றனர். தற்போது பலரும் வெண்டை நடவு செய்துள்ளனர். இது 45 நாட்களில் காய் வரத்து அதிகரிக்கும். அதன்பின் விலை குறையும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE