திண்டுக்கல் : பெண்களை அவமதித்த தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதியை கண்டித்து, திண்டுக்கல்லில் அ.தி.மு.க., மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கொரோனா விதியை கண்டுகொள்ளாமல் கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் உதயநிதியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக மெயின் ரோட்டில் ஓரமாக மேடை அமைக்கப்பட்டது. தலைமை கழக பேச்சாளர் திருப்பூர் சாந்தியுடன், ஏராளமான பெண்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டு நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க 60 வயதுக்கும் மேலான பலரை 'அழைத்து' வந்திருந்தனர்.
பங்கேற்றவர்களில் 90 சதவீதம் பேர் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி ஒரே இடத்தில் கூட்டமாக நின்றனர். அ.தி.மு.க., அரசு வகுத்த கொரோனா விதிமுறைகளை, துளியளவுகூட அக்கட்சியினரே பின்பற்றாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை நீடித்தால் மாவட்டத்தில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆர்ப்பாட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE