பழநி : பழநி தைப்பூசவிழாவையொட்டி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
பாதயாத்திரைக்கு பிரசித்திபெற்ற தைப்பூசவிழா பழநி முருகன் கோயிலில் ஜன.22 முதல் ஜன.31 வரை நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலேசானை கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. போலீஸ் டி.ஐ.ஜி.முத்துச்சாமி, கோயில் செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, ஆர்.டி.ஓ. அசோகன் முன்னிலை வகித்தனர்.பக்தர்கள் கூடும் இடங்களில் அரசு வழிகாட்டுதல்படி கிருமிநாசினியால் கைகழுவ வசதி செய்யப்படும்.
பாதயாத்திரை பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறிந்து அடையாள கச்சை கட்டப்படும். அவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். தற்காலிக காவடி மண்டபங்கள் அமைக்கப்படும்.மாநில, தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் சேதமடைந்ததை சரிசெய்யாமல் இருப்பதற்கு காரணமான அதிகாரிகளை கலெக்டர் கண்டித்தார். விரைவில் அவற்றை சரிசெய்ய உத்தரவிட்டார்.
பக்தர்களுக்கான நடைபாதையை சரிசெய்யவேண்டும். குடிநீர், கழிப்பறை, மருத்துவம், வழியில் விளக்குகள் அமைத்தல் வேண்டும். தரமான அன்னதானம் வழங்குவதை ஆய்வு செய்ய வேண்டும்.சண்முகநதியில் ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சுகாதார பணிக்காக கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவர்.
விழாநாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.குற்றச்சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள், கேமரா வைக்கப்படும். 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என ஆலோசனை தெரிவித்தனர். சுகாதார இணைஇயக்குனர், ஜெயந்தி, அரசு தலைமைமருத்துவர் உதயகுமார், டி.எஸ்.பி.,சிவா, தாசில்தார் வடிவேல்முருகன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE