நடிகராக இருந்த போதும், முதல்வரான பிறகும், எம்.ஜி.ஆர்., விரும்பிக் கொண்டாடியது பொங்கல் பண்டிகையைத்தான்.அன்று, தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி மகிழ்வார்.
அன்று, தன்னைப் பார்க்க எத்தனை பேர் வந்தாலும், அத்தனை பேரையும் முகமலர்ச்சியுடன் சந்தித்து, பரிசுப்பணம் அளித்து சந்தோஷப்படுத்துவார்.எம்.ஜி.ஆருடன் பொங்கல் பண்டிகை அனுபவம் பற்றி, அவரிடம் உதவியாளர்களாக இருந்த சாமிநாதன், மகாலிங்கம் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் அலாதியானது.அவர்கள் கூறியதாவது:புத்தாண்டு, தீபாவளியை மட்டும் அல்ல, தன் பிறந்த நாளைக்கூட கொண்டாடாதவர், எம்.ஜி.ஆர்., தீபாவளிக்கு வாழ்த்து சொன்னால், சின்னதாய் சிரிப்பார். அதே போல, ஜனவரி 17ல் அவரது பிறந்த நாளை, அவர் இருந்தவரை கொண்டாடியது இல்லை. முதல்வரான பிறகு, புத்தாண்டில் அதிகாரிகளை சந்திப்பது மரபு என்பதால். சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்.
ஆனால், பொங்கல் பண்டிகையை எப்போதுமே உற்சாகமாக கொண்டாடுவார்.நடிகராக இருந்த போது ராமாவரம் தோட்டம், சத்யா ஸ்டூடியோ, இப்போது அ.தி.மு.க., தலைமை அலுவலகமாக உள்ள சத்தியபாமா திருமண மண்டபம், திருநகர் கட்சி அலுவலகம் என, எல்லா இடத்திலும், அனைத்து தரப்பினரையும் எம்.ஜி.ஆர்., சந்திப்பார். அதற்கு முன், முதல் காரியமாக, தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களை, பொங்கலன்று காலையிலேயே சந்திப்பார். இதற்காக, ராமாவரம் தோட்டத்திற்கு குடும்பத்தோடு நாங்கள் போய்விடுவோம். எல்லாருக்கும் நல்ல துணிமணிகளுடன், நிறைய பணமும், உணவும் தந்து உபசரிப்பார்.
குடும்பத்தார் அனைவரிடமும் அன்பாக பேசுவார். எங்கள் குடும்பத்தில் பலரும், அவரது புண்ணியத்தில்தான், பட்டு வேட்டி சேலையை பார்த்தோம்.சத்தியபாமா திருமண மண்டபத்தில், இன்னும் உற்சாகமாக இருப்பார். ஊழியர்களுக்கு, சாக்கு போட்டி, ஸ்பூன் ரேஸ் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மகிழ்விப்பார்.இதே போல ஸ்டூடியோ, தி.நகர் கட்சி அலுவலகம் சென்று, அங்குள்ளவர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குவார்.எங்கே போனாலும், எம்.ஜி.ஆரை காண மக்கள் திரண்டுவிடுவர். அவர்களையும் அருகில் அழைத்துப் பேசுவார். அவரைப் பொறுத்தவரை கையில் பணம் இருந்தால், அதை பரிசளித்து செலவிடும் வரை துாங்கமாட்டார் என்றே சொல்லலாம்.
ஒரு முறை, ஒரு படத்தின் மூலம், சில லட்சம் ரூபாய் கூடுதலாக வந்தது. அந்தப் பணத்தை, வேண்டியவர்களுக்கு தேடி தேடிக் கொடுத்து உதவினார்.எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டு, ஒரு நாளுக்கு நுாற்றுக்கும் அதிகமான கடிதங்கள் வரும். பல கடிதங்களில் முழு முகவரி இருக்காது. 'எம்.ஜி.ஆர்., சென்னை' என்று மட்டுமே இருக்கும். இன்னும் சில கடிதங்களில், முகவரி பகுதியில் அவர் படத்தை மட்டும் ஒட்டி அனுப்பியிருப்பர். எந்த கடிதத்தையும் புறக்கணிக்க மாட்டார். படிப்பு செலவு கேட்டு யாராவது எழுதியிருந்தால், முதல் வேலையாக அதை கவனிப்பார். தன்னால் முடியாத காரியமாக இருந்தால், 'முடியாது' என, நிர்தாட்சண்யமாக மறுக்கமாட்டார். மனதை காயப்படுத்தாமல் பதில் எழுதுவார்.
ஒருவர், தனக்கு அரசு வேலை வேண்டும் என்று கேட்டு, அதற்கு வாய்ப்பில்லை என்றால், எம்.ஜி.ஆர்., பதில் சொல்லும் பாணியே தனி.'உங்கள் தகுதிக்கு வியாபாரம் செய்தால் நன்றாக வருவீர்கள். ஆரம்ப செலவிற்கு பணம் அனுப்புகிறேன். வியாபாரம் செய்யுங்கள்' என்று, பதில் எழுதி, பணமும் தருவார். அப்படி உதவி பெற்று, பின்னாளில் பெரும் வியாபாரிகளாக மாறி, எம்.ஜி.ஆரை சந்தித்து ஆசிபெற்றவர்கள் ஏராளம்.
அதே போல, எம்.ஜி.ஆர்., என்றால், அவர் எதுவும் கேட்காமலே, மக்கள் உதவிக்கரம் நீட்டியதும் உண்டு. அ.தி.மு.க.,வை துவக்கிய போது, கட்சி செலவுக்கு, தங்களால் இயன்ற 1 ரூபாய், 2 ரூபாய் கூட கட்சி நிதியாக தபாலில் அனுப்பியவர்கள் ஏராளம். ஒரு முறை, ஒரு ஏழை உப்பளத் தொழிலாளி, 'தலைவரே, என்னால் உங்களுக்கு கொடுக்க முடிந்தது இதுதான்' என்று சொல்லி, மடியில் இருந்த உப்பு பொட்டலத்தைக் கொடுத்தார். அதையும் அன்புடன் வாங்கிக் கொண்டார். ஊழியர்களை, தன் குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பார் எம்.ஜி.ஆர்., அவரிடம் உதவியாளராக இருந்த எனக்கு திருமணத்தை நடத்திவைத்ததே, அவர்தான்.
எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் பெயரில்தான், அழைப்பிதழே அச்சிடப்பட்டது. ஊழியர்களின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பார். தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தால், மூன்று முடிச்சு போடப்படும் வரை, மாங்கல்யத்தை கையில் பிடித்தபடி இருப்பது அவரது சுபாவம், என் திருமண படத்தைப் பார்த்தால் அது தெரியும். மகாலிங்கம்எம்.ஜி.ஆரின் உதவியாளராக இருந்தவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE