பொள்ளாச்சி:''சினிமா நட்சத்திரமாக என்னை பார்க்க வேண்டாம்; மாற்றத்தை உருவாக்கும் சிறு விளக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள்,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் பேசினார்.
மக்கள் நீதி மையம் தலைவர் கமல், திருப்பூர் மாவட்டம், உடுமலையில் பேசுகையில், ''பெண்கள், இளைஞர்கள் நினைத்தால் அரசியல் மாற்றத்தை கொண்டு வரலாம். என்னை நட்சத்திரமாக பார்ப்பவர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், உங்கள் வீடுகளில் எரியும் சிறு விளக்காகவே இருக்க விரும்புகிறேன்.
ஊழல் காற்றில் இந்த விளக்கு அணையாமல் பாதுகாக்க வேண்டிய கடமை மக்களுடையது,'' என்றார்.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அவர் பேசுகையில், ''மாற்றத்தை நோக்கி, மழையையும் பொருட்படுத்தாமல், மக்கள் காத்திருக்கின்றனர்.
பி.ஏ.பி., திட்டத்துக்கு பின், வேறு பாசன திட்டங்கள் கொண்டு வரவில்லை. தனி மாவட்டமாக உருவாக பெருமை வாய்ந்த நகரம் பொள்ளாச்சி. இந்த ஊரில், பாலியல் குற்றம் நடந்ததை, ஊடகங்கள் வாயிலாக தெரியவந்ததும், கண்டனம் தெரிவித்தேன். நேர்மையான அரசு உருவாக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள்,'' என்றார்.
சுற்றுலா தலமாக்குவோம்!
மடத்துக்குளத்தில் அவர் பேசுகையில், ''இங்கு, கல்திட்டை, கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதிலிருந்து, மிகவும் தொன்மையான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. எங்களை ஆதரித்தால், இந்த பகுதியை சுற்றுலா தலமாக மாற்றுவோம். தென்னை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கும், கரும்பு விவசாயம் செழிக்கவும் பல திட்டங்கள் வைத்துள்ளோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE