ஜெயின் அன்னபூர்ணா டிரஸ்ட் சார்பில், 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. தினசரி, 250 பேருக்கு மட்டுமே இது வழங்கப்படுகிறது.
சென்னையில், ஏழை மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் சுவையான உணவு வழங்க, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டம் கொண்டு வந்தார். அதன் படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 200 வார்டுகளிலும் தலா இரண்டு அம்மா உணவகங்கள் திறக்கப் பட்டுள்ளன. இதே நோக்கத்தை பின்பற்றி, பல்வேறு சமூக சேவை நிறுவனங்களும் ஏழை மக்களுக்கு உணவளித்து வருகின்றன. இலவசமாக இல்லை; வாங்குவோரின் கவுரவம் காக்க வேண்டும் என்பதே, இத்திட்டத்தின் உள்ளார்ந்த நோக்கம்.
இதை பின்பற்றி, தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஜெயின் கோவில் முன், தினசரி, 250 பேருக்கு, 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை ஜெயின் அன்னபூர்ணா டிரஸ்ட் செயல்படுத்தியுள்ளது. இதுகுறித்து டிரஸ்ட் நிர்வாகிகள் கூறியதாவது: மனிதர்கள், போதும் என,சொல்வது உணவை மட்டும் தான். இலவசம் என்ற பெயரில் வழங்கும் செயல் மக்களை சோம்பேறியாக்கிவிடும்; உணவு என வரும் போது, பிச்சை என்ற எண்ணத்தை கூட ஏற்படுத்திவிடக் கூடும்.
அதனால் தான், 1 ரூபாய் கொடுத்தால் தான் உணவு என முடிவு செய்தோம். குறைந்த பட்சம் ஒரு நாளுக்கு, 250 பேருக்காவது வழங்க வேண்டும் என்பது எங்களின் முடிவு. இதை தொடர்ந்து வழங்குவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE