திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல்குப்பம் பகுதியில், சாலையோரம் ஒரு வேன், பஞ்சர் மற்றும் பழுது பார்க்கும் கடையாக இயங்கி வருகிறது. திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரண்வாயல்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வி.மோகன், 48. வாடகை இடத்தில் பஞ்சர் கடை நடத்தி வந்தார்.
அந்த இடத்தை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தவணையில் பணம் செலுத்தும் வகையில், வேன் ஒன்றை வாங்கினார். அதிலேயே பஞ்சர் கடையை அமைத்தார். நெடுஞ்சாலையோரம் அந்த வேனை நிறுத்தி, வாகனங்களுக்கு பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கனரக வாகனங்களுக்கு கிரீஸ் நிரப்பும் பணியும் செய்கிறார். வாகனங்களை பொருத்து, 80 - 250 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக கூறுகிறார். கடைக்கு வாடகை, கரண்ட் பில் போன்ற பிரச்னைகள் இல்லை.
நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களில் பழுது, பஞ்சர் ஏற்படும் போது, இது போன்ற நடமாடும் பழுது நீக்கும் கடைகள், பெரிய உதவியாக அமைந்து விடுகிறது. மற்றொருபுறம், தேவையான இடத்துக்கு வேனை ஓட்டிச் சென்று, அங்கு வாகனங்களுக்கு பழுது அல்லது பஞ்சர் பார்ப்பது, மோகனுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தி தருகிறது. மாற்றி யோசித்தால், இது போன்ற வெற்றிகள் சாத்தியமே.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE