-- நமது நிருபர் --சென்னை காவல் துறையில், 1985ல் நீச்சல் வீரராக பணிக்கு சேர்ந்து, சென்னை மாநகராட்சியில், 2004 முதல், 2018 வரை நீச்சல் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.
தற்போது மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார். சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி, தற்போது வரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்துள்ளார்.அவருடன் உரையாடியதிலிருந்து:நீச்சலால் ஏற்படும் நன்மைகள்?உடல் உழைப்பு இல்லாத நிலையில், வயது முதிர்வின் போது ஏற்படும், மூட்டு, கழுத்து வலி, தற்போது, 25 வயது இளைஞர்களுக்கும் ஏற்படுகிறது. அவ்வாறு இருப்பவர்கள், தொடர்ந்து நீச்சலில் ஈடுபடுவதால், வலிகளில் இருந்து விடுபடலாம்.நீச்சலின்போது, உடலின் அனைத்து பாகங்களும் வேலை செய்யும் என்பதே இதற்கு காரணம்.தொடர்ந்து நீச்சலில் ஈடுபடுவோருக்கு, பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுவதில்லை. இதய பிரச்னை இருப்பவர்களை, மூத்த நிபுணர்கள், என்னிடம் நீச்சல் பயிற்சிக்கு அனுப்புகின்றனர்.
தினம் ஒரு மணி நேரம் நீச்சலில் ஈடுபட்டால் ஆயுள் கூடும் என, மருத்துவ ஆய்வு கூறுகிறது. பெண்களுக்கான நன்மை என்ன?ஆண்களை விட, பெண்களுக்கு நீச்சல் மிக அவசியம். 'ஹார்மோன்' மாற்றத்தால், பல பெண்களுக்கு மாதவிடாய் துவங்கி, பல பிரச்னைகள் ஏற்படுகிறது.அவர்கள் தொடர்ந்து நீச்சலில் ஈடுபடுவதன் மூலம், உடலும், மனமும் உறுதியாகும். பெண்களின் பல பிரச்னைகள் சரியாகி வருகிறது.மன வளர்ச்சி குன்றியவர் களுக்கு பயிற்சி ஏன்?சென்னை மாநகராட்சி சார்பில், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, இலவச நீச்சல் பயிற்சி அளித்தோம். அப்போது, பெரும்பாலானோருக்கு, மருத்துவ பரிசோதனையில், மூளையின் செயல்படும் திறன் அதிகரித்ததை காண முடிந்தது.
சில மாணவர்கள், நீச்சல் பயிற்சியிலேயே இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி அளித்ததையே, மன நிறைவாக கருதுகிறேன்.நீச்சல் பயிற்சியாளராக கூறும் அறிவுரை?நீச்சல் கற்றவர்கள், பெரும்பாலும் ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற முயற்சிப்பர். அது தவறு. அது இரண்டு பேருக்கும் ஆபத்தில் முடியும். நீச்சல் கற்றதால், தங்களை மட்டுமே தற்காத்துக் கொள்ள முடியும். நீச்சலில், உயிர் காப்பாளர் பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே, பிறரையும் காப்பாற்ற முடியும். அதுபோன்ற அவசர காலத்தில், கயிறு, குச்சி போன்றவற்றை பயன்படுத்தி, ஆபத்தில் உள்ளவர்களை சற்று ஆறுதல்படுத்திய பின், மீட்க முயற்சிக்கலாம்.அதிலும், அவர்கள் தங்களை அழுத்தாத அளவிற்கு விழிப்புடன் செயல்பட்டு மீட்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE