சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில், 25 ரயில்களை இயக்க, சி.எம்.ஆர்.எல்., நிறுவனம் திட்டமிட்டுள்ளது.சென்னையில், முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம், முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இரண்டாம் கட்டமாக, மூன்று வழித்தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த ஆண்டு நவ., 21ல் இதற்கான அடிக்கல் நாட்டினார்.மாதவரம் - சோழிங்கநல்லுார், மாதவரம் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பை -- பாஸ் வரை, மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இத்திட்ட பணிகளை, வரும், 2026க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.தானியங்கி ரயில்டில்லி மெட்ரோவில், மெஜந்தா வழித்தடத்தில், நாட்டிலேயே முதல் முறையாக தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை, சமீபத்தில், பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
அப்போது அவர், 'நாட்டின் பிற நகரங்களிலும், தானியங்கி மெட்ரோ ரயில் திட்டம் விரிவுபடுத்தப்படும்' என்றார்.இதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில், ஓட்டுனர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்க, சி.எம்.ஆர்.எல்., நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.புதிய அனுபவம்சென்னையில் தற்போது, மெட்ரோ ரயில், நான்கு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இரண்டாவது திட்டத்தில், முதல் கட்டமாக மூன்று பெட்டிகளுடனும், பயணியரின் வரவேற்பையொட்டி, ஆறு பெட்டிகளுடனும் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதனால், நிலையங்கள், ஆறு பெட்டிகள் நின்று செல்லும் அளவுக்கு வடிவடிவமைக்கப்பட உள்ளன.இரண்டாம் கட்ட திட்டத்தில், முதல் கட்டமாக, 25 எண்ணிக்கையில், ஓட்டுனர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதில், முதல் கட்டமாக, தானியங்கி முறையில் இயங்கும் ஆறு ரயில்கள் வாங்கப்பட உள்ளன. இந்த ரயில்களை வடிவமைத்து வழங்கும் ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணிகளை, சி.எம்.ஆர்.எல்., நிறுவனம் துவக்கியுள்ளது.டில்லியை போல, சென்னை மக்களும், அடுத்த சில ஆண்டுகளில் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் பயண அனுபவத்தை பெற முடியும்.
இது, சென்னை மெட்ரோ ரயில் சேவையை உலக தரத்துக்கு உயர்த்தும் என, எதிர்பார்க்கப் படுகிறது.மூன்று வழித்தடங்கள்!இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள மூன்று வழித்தடங்கள் குறித்த விபரம்:* மூன்றாவது வழித்தடமாக, மாதவரம் -- சிறுசேரி சிப்காட் வழித்தடம் அமைந்துள்ளது. மொத்தம், 45.13 கி.மீ., தொலைவுக்கான இதில், 19.9 கி.மீ., மேம்பால முறையிலும், 26.72 கி.மீ., சுரங்க முறையிலும் அமைக்கப்படுகின்றன* நான்காவது வழித்தடமாக, கலங்கரைவிளக்கம் -- பூந்தமல்லி வழித்தடம் அமைகிறது.
மொத்தம், 26.09 கி.மீ., தொலைவில், 16 கி.மீ., மேம்பால முறையிலும், 10.07 கி.மீ., சுரங்க முறையிலும் அமைய உள்ளது.* ஐந்தாவது வழித்தடமாக மாதவரம் -- சோழிங்கநல்லுார் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம், 47 கி.மீ., தொலைவுக்கான இவ்வழித்தடத்தில், 41.17 கி.மீ., மேம்பால முறையிலும், 5.3 கி.மீ., சுரங்க முறையிலும் அமைக்கப்பட உள்ளது.31 நகரங்களில் 'சக்சஸ்'ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் போக்குவரத்து, சென்னைக்கு புதிதாக தோன்றலாம். உலக அளவில், 1982 முதல், பல்வேறு நாடுகள், தானியங்கி ரயில் போக்குவரத்தை செயல்படுத்தி வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, 31 சர்வதேச நகரங்களில், தானியங்கி மெட்ரோ ரயில் போக்குவரத்து செயல்பாட்டில் உள்ளது. ஜப்பான், அமெரிக்கா, பிரேசில், கனடா, சிலி, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இதில் முன்னணியில் உள்ளன.ரயில் பாதையும், ரயில்களும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கப்படும். செயற்கை கோள் மற்றும் கணினி சிக்னலிங் முறையில் ரயில்கள் கட்டுப்படுத்தப்படும்.'ரிமோட் கன்ட்ரோல்' கார்கள் இயக்கப்படுவது போன்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில், ரயில்களுக்கான தொடர்பு ஏற்படுத்தப்படும்.முதலில் மூன்றாம் நிலை தான்!ஓட்டுனர் இல்லாமல் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான வழிமுறைகள்:* மெட்ரோ ரயில் திட்டத்தில், இயக்குதல், நிறுத்துதல், கதவுகள் திறந்து - மூடுதல், பிரச்னை ஏற்படும் போது ரயிலை நிறுத்துதல் ஆகிய நான்கு விஷயங்கள், முக்கிய பணிகளாக உள்ளன.
இதில், நான்கு பணிகளையும் மனிதர்களை பயன்படுத்தி செயல்படுத்துவது முதல் நிலை* ரயிலை இயக்குவது, நிறுத்துவது தானியங்கி முறையிலும், கதவுகளை திறப்பது, பிரச்னை ஏற்படும் போது ரயிலை நிறுத்துதல் ஓட்டுனர் வாயிலாக செயல்படுத்துவ இரண்டாம் நிலை* ரயிலை இயக்குதல், நிறுத்துதல் தானியங்கி முறையிலும், கதவு திறப்பது, பிரச்னையின் போது ரயிலை நிறுத்துவதை உதவியாளர் வாயிலாக செயல்படுத்துவது மூன்றாம் நிலை* நான்கு பணிளையும் தானியங்கி முறையில் செயல்படுத்துவது நான்காம் நிலை* நான்காம் நிலை தான், முழுமையான தானியங்கி நிலையாக உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது* டில்லியில், ஓட்டுனர் இல்லா ரயில் போக்குவரத்து, முதலில் மூன்றாம் நிலையில் துவங்க உள்ளது,
அதன் பின், இது நான்காம் நிலைக்கு மாற்றப்படும்* சென்னையிலும், மக்களிடம் அச்சம் ஏற்படக்கூடாது என்பதற்காக, முதலில் மூன்றாம் நிலையிலும், பின்னர் நான்காம் நிலையிலும் ஓட்டுனர் இல்லாத ரயில் போக்குவரத்து செயல்படுத்தப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE