'மியூசிக் அகாடமி' சார்பில், டிசம்பர் 2020 சீசனில், நடந்த கச்சேரிகளில், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலனின் கச்சேரியும் ஒன்று.இவர் தன் கச்சேரியில், 'பிலஹரி' ராகத்தை மெயினாக எடுத்துக் கொண்டிருந்தார்.
இந்த ராகத்தைப் பொறுத்த வரை வேறு ரகமான பிரச்னை. இதில் எண்ணற்ற கிருதிகள் இருப்பதால், எதை எத்தனை முறை கேட்டு அவற்றிலிருந்து நமக்கு வேண்டிய உந்துதல் சக்தியைப் பெற்றுக் கொள்வது! ஆரம்பப் பாடமான, 'ரார வேணு கோபா பாலா' என்ற ஸ்வரஜதியிலிருந்து, விதம் விதமான கிருதிகளும் இதில் ஏராளம், ஏராளம். 'தொரகுனா, பரிதானமிச்சிதே, ஸ்ரீ பாலசுப்ரமண்யா, மாமயூரமீதிலே நீ வா, நாஜீவாதார, கனுகொண்டிநி, விடுதலை' இப்படிச் சொல்லலாம். ஸ்ரீரஞ்சனி இதை மனதில் இருத்தியே, இந்த பிலஹரிப் பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும்.
இந்த ராகத்தில், ஜண்டைப் பிரயோகங்களும், தாட்டுப் பிரயோகங்களும் ஒன்றை மற்றொன்று பின்தொடரும்.. ஆஹதப் பிரயோகங்களுக்கும் இடமுண்டு. எல்லா பாடல்களிலுமே, சங்கதிகள் ஏராளமாக வார்க்கப்பட்டிருக்கும். ஆலாபனையில், அகார அசைவுகளை எந்தவிதத் தடையுமின்றி உபயோகிக்கலாம். ஸ்ரீரஞ்சனி அளித்த ஆலாபனை, தொடர் சங்கதிகள் பல கொண்டு, இந்தக் கோணங்களில் ராகத்தின் எல்லா போக்குகளையும் ரசித்து, அனுபவித்து, நல்ல பயிற்சியுடன் கூடி, 'குறையொன்றும் இல்லை' என்பதாக, ரசிகர்களை வந்தடைந்தது.
'ஸ்ரீ சாமுண்டேஸ்வரியில்' உள்ள, சிட்டை ஸ்வரத்தை, இரண்டு காலங்களிலும் பாடிய பின், கற்பனைஸ்வரங்களை, 'ராகாநிஷாகார சன்னிபவதனே' என்ற இடத்தில் அமைத்திருந்தார். சுருட்டி ராகத்தைத் தேர்வு செய்தது கூட உன்னதமானதாகும். ஏனெனில், இது புழக்கத்தில் இல்லாத ஒன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. அதைப் போல, முத்தையா பாகவதரின் பாடலில், கற்பனை ஸ்வரங்களுக்கான வரி, 'தல்லி தண்ட்ரி குரு'. இதில், 'தல்லி, தண்ட்ரி, குரு' எனும், மூன்று இடங்களில் தனித்தனியாக அமையுமாறு, ஸ்வரங்கள் பாடியது வெகு சிறப்பு. தெலுங்கில், தல்லி என்றால் தாய், தண்ட்ரி என்றால் தந்தை, என்றும் பொருள்படும்.
துக்கடாவிற்கென்று ஒரு மணி நேரக்கச்சேரியில் ஏது நேரம். 'கொண்டல் வண்ணனை' என்ற நாலாயிர திவ்யப்ரபந்தம், வசந்தாவில் உருவெடுத்து, உடன், கமாஸ் ராகமேற்று, பின் அடுத்து வரவிருந்த தில்லானாவின் ராகமான மதுவந்தியைப் பற்றிக் கொண்டது. இந்த ராக மாற்றங்கள் மெய்சிலிர்க்க வைத்தன! சிதம்பரம் பத்ரிநாத் வயலினில், ஸ்ரீரஞ்சனி பிலஹரி ராக வாசிப்பில் சாதித்ததை உற்று கவனித்து, அவரது வாத்தியத்தில் உள்ள ஜாரு, விட்டு விட்டு இடைவெளியுடன் வரும், 'ஸ்டாக்காட்டோ' எனும் பதங்களுடன் வாசித்தது பேருவகை யளித்தது.
மிருதங்கத்தில், அக் ஷய் ஆனந்த் தனக்கு கிடைத்த அவகாசத்தை நல்ல விதமாகப் பயன்படுத்தி, தக்க சொற்களையும் நடைகளையும் கொடுத்து ஒரு தனியை அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE