அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் பிரதமரின் நண்பர். பதவியை இழந்துள்ள அவர், அணு ஆயுதத்தை கூட பயன்படுத்தக் கூடும் என, அந்நாட்டு சபாநாயகர் எச்சரித்துள்ளார். மோடியின் நண்பர் லட்சணத்தை பார்த்தீர்களா?
- மார்க்சிஸ்ட் பேராசிரியர் அருணன்
'மோடி என்றால், உங்களுக்கு அப்படி வேப்பங்காயாக கசக்கிறதோ; பாக்., பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளதை படியுங்கள்; அதன் பிறகாவது மனதை மாற்றுங்கள்...' என, அறிவுரை கூறத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் பேராசிரியர் அருணன் அறிக்கை
சமூக வலைதளங்களில் செய்யப்படும் அவதுாறு பிரசாரங்கள், எல்லை கடந்து விட்டன.பேச்சுரிமை, எழுத்துரிமை என்ற பெயரில், கண்டதை எல்லாம் எழுதுகின்றனர். இதை தடுக்க, அனைவரும் பேசி முடிவு செய்ய வேண்டும்.
- லோக்சத்தா கட்சி நிறுவனர் ஜெயபிரகாஷ்
'அமெரிக்க அதிபர் டிரம்ப் கணக்கை, 'டுவிட்டர்' ரத்து செய்தது போல, அவதுாறு பிரசாரத்தில் ஈடுபடுவோரை, சமூக வலைதளத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், லோக்சத்தா கட்சி நிறுவனர் ஜெயபிரகாஷ் அறிக்கை.
மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில், ஊர் ஊராக சென்று, கூட்டங்கள் போடும், தி.மு.க., தலைவர்கள், அங்கு பெறும் மனுக்களை என்ன செய்ய போகிறார்கள்; யாரிடம் கொடுக்கப் போகின்றனர்?
- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

'எதிர்க்கட்சியிடம் மனுக்களை கொடுக்கும் அளவுக்கு, மக்களுக்கு கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு.
இந்தியாவுக்கான கொரோனா தடுப்பூசி தேவை முழுமையடையும் வரை, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படாது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பிரேசில் பிரதமர், 'எங்களுக்கு தடுப்பூசிகளை விரைவாக அனுப்பி வையுங்கள்' என, நெருக்கடி கொடுத்துள்ளார். நெருக்கடிக்கு, பிரதமர் மோடி பணிவாரா?
- பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி
'நம் தேவைக்கு போக, மீதமுள்ள தடுப்பூசிகளை, தேவைப்படும் நாடுகளுக்கு விற்று, அன்னியச் செலாவணி ஈட்ட, பிரதமர் நினைக்கிறாரோ என்னவோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அறிக்கை.
அ.தி.மு.க., தற்போது, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஓட்டத்தில், யாருடைய தாக்கமும் எதுவும் செய்து விட முடியாது.
- அமைச்சர் பாண்டியராஜன்
'வேகமாக சென்றால் தான் எக்ஸ்பிரஸ்; மெதுவாக சென்றால், சாதா ரயில்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE