சேலம்: அனுமன் ஜெயந்தியை ஒட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், ஆஞ்சநேயருக்கு, சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீராம பக்தன் ஆஞ்சநேயரின் அவதார திருநட்சத்திரமான மார்கழி மூல நட்சத்திரம், அமாவாசையான நேற்று, அனுமன் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபி?ஷகம், புஷ்ப அலங்காரத்தில் பூஜை நடந்தது. தொடர்ந்து, 1,008 வடை மாலை சாத்துபடியில் அருள்பாலித்தார். பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். சேலம், பட்டைக்கோவில் ஆஞ்சநேயர், வெண்ணெய் காப்பு அலங்காரம்; ஜாகீர்அம்மாபாளையம், வீரபக்த ஆஞ்சநேயர் முத்தங்கி; செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில் ஆஞ்சநேயர், நெத்திமேடு கருட பெருமாள் ஆஞ்சநேயர், வெள்ளி கவசம் சாத்துபடி; சீரகாபாடி, 77 அடி உயர விஸ்வரூப ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடந்தது. காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில் உள்ள, வீரபக்த ஆஞ்சநேயருக்கு, 16 வகை மங்கல பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, 1,008 வடை, 1,008 வெற்றிலை மாலைகள் அணிவித்து, வெள்ளி கவசம் சார்த்தி சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஓமலூர் அருகே, தாத்தியம்பட்டியில், 12 அடி உயர ஜெய்வீர ஆஞ்சநேயர், சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இடைப்பாடியில் உள்ள மூக்கரை நரசிம்ம
பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம், திருநீறு அபிஷேகம், சந்தன அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கம் கவசம் சார்த்தப்பட்டது. ஆத்தூர், விநாயகபுரம் கூட்ரோடு, ரங்கநாதர் கோவிலில், 1,008 தாமரை, வடை, வெற்றிலை மாலைகள் சார்த்தப்பட்டு, புஷ்ப அலங்காரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். வாழப்பாடி, அக்ரஹாரம், சென்றாய பெருமாள், பேளூர் அஷ்டபுஜபால மதன வேணுகோபாலசுவாமி கோவில்களில், அனுமனுக்கு வடைமாலை சாத்தப்பட்டது. அதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், ஆஞ்சநேயருக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து, தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பால், அனைத்து கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE