சேலம்: இரு மாத சம்பள நிலுவை, பொங்கல் கருணைத்தொகையை உடனே வழங்கக்கோரி, அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில், மாநகராட்சி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சி ஊழியர்களுக்கு, கடந்த நவம்பர், டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 3,000 ரூபாய் கருணைத்தொகை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பளம் மட்டுமின்றி, கருணைத்தொகையும் வழங்கப்படாதால், ஊழியர்கள் அவதிப்பட்டனர். நேற்று, சேலம் மாநகர பொறியாளர் பிரிவு அடிப்படை பணியாளர் சங்கத்தினர், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பண்டிகையை கொண்டாட, இரு மாத சம்பள நிலுவை, கருணைத்தொகையை உடனே வழங்க கோரிக்கை விடுத்தனர். மண்டல உதவி கமிஷனர் சரவணன் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், ஊழியர்கள் கலைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE