அரூர்: கோபாலபுரம், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, வாகனங்களில் ஏற்றி வரப்பட்ட கரும்புகளை இறக்க வலியுறுத்தி, டிரைவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்கான, கரும்பு அரவை கடந்த, 25ல், துவங்கியது. இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல், 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆலையில் கரும்பு அரவை பாதிக்கப்பட்டதுடன், விவசாய தோட்டங்களிலிருந்து வெட்டி, 200க்கும் மேற்பட்ட லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்பட்ட கரும்புகள் காய்ந்து கிடக்கின்றன. வாகனங்களிலுள்ள கரும்புகளை இறக்க வலியுறுத்தி, நேற்று மதியம், 3:30 மணிக்கு, கோபாலபுரம் - தென்கரைகோட்டை சாலையில், டிரைவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, வாகனங்களில் கரும்புகளை ஏற்றி வந்துள்ளோம். வேலை நிறுத்தம் குறித்து முன்னதாக கூறியிருந்தால், கரும்புகளை ஏற்றி வந்திருக்க மாட்டோம். டிரைவர்கள், கிளினர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தடுமாறுகிறோம். பொங்கல் பண்டிகை வருவதால், அனைவரும் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும். எனவே, லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் இருந்து கரும்புகளை இறக்க, ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து, அ.பள்ளிப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், மாலை, 4:00 மணிக்கு கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE