புதுக்கோட்டை: ''தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி வரும், 16ம் தேதி துவங்குகிறது,'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் விராலிமலையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து தற்போது, ஆயிரத்திற்கும் கீழே தான் பாதிப்பு என்பது உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் தடுப்பூசி போட, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வரும், 16ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்வர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார். மத்திய அரசிடம் இருந்து தற்போது, 5 லட்சத்து, 36 ஆயிரத்து 550 கோவிட்ஷில்ட் தடுப்பு மருந்துகள் வந்துள்ளது. இந்த தடுப்பு மருந்து தமிழகத்தில் உள்ள, 10 மண்டல பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தடுப்பு மருந்துகள் போடக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும், தயாராக உள்ள, 307 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோன்று, 20 ஆயிரம், கோவாக்சின் தடுப்பு மருந்து விரைவில் தமிழகத்திற்கு வர உள்ளது. முதலில், 6 லட்சம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மத்திய அரசின் வழிமுறைகளின்படி தடுப்பு மருந்து வழங்கப்படும். அதன் பிறகு, தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பு மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். தமிழகத்தில் 1.5 கோடி ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பல ஆய்வுகளுக்கு பிறகு தான் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. ஆராய்ச்சியின் போது எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை. எனவே, தடுப்பு மருந்து பாதுகாப்பானது. பொதுமக்கள் எந்த விதமான பயம் தேவையில்லை. இந்த தடுப்பு மருந்து போடப்படுவதால், புதுவகையான வைரஸ் நோய் வராமல் காப்பதற்கு வழிவகை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மைக்கை தட்டிவிட்ட அமைச்சர்: பேட்டியின் போது, தனியார் 'டிவி' (சன்) மைக்கை வைத்தால் பேட்டி தர முடியாது என்று கூறி, அதை கையில் எடுத்து தனியே தூக்கி போட்டார். அதை எடுத்தால் மட்டுமே பேட்டி அளிக்க முடியும் என்று கறாராக கூறினார். நேற்று முன்தினம், அமைச்சர் விஜயபாஸ்கர் தனது தொகுதியில், அனைத்து வீடுகளுக்கும் பொங்கல் சீர் கொடுத்தார். அதை செய்தியாக வெளியிட்டதால், அந்த டிவி மீது அமைச்சர் ஆத்திரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE