சேலம்: நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தால், சேலம் மாவட்ட சந்தைகளில், ஆடுகள் விலை உயர்ந்து, 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
நாளை பொங்கல் பண்டிகையால், சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி, மணியனூர்; தர்மபுரி - பென்னாகரம்; கிருஷ்ணகிரி - பர்கூர்; நாமக்கல் - மோர்பாளையம், திருச்செங்கோடு; ஈரோடு - அந்தியூர்; திருப்பூர் - வெள்ளகோவில், காங்கேயம் உள்ளிட்ட சந்தைகளுக்கு, விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஆடுகளின் வரத்து, நேற்று அதிகரித்தது. வெளி மாநில, மாவட்ட வியாபாரிகள் படையெடுத்ததால், விற்பனையும் சூடுபிடித்து, விலை, 500 ரூபாய் வரை உயர்ந்தது. கடந்த வாரம், 5,500 முதல், 6,500 ரூபாய் வரை விற்ற, 10 கிலோ வெள்ளாடு, நேற்றைய சந்தையில், 6,000 முதல், 7,000 ரூபாய் வரை விற்பனையானது. 5,000 முதல், 5,500 ரூபாய் வரை விற்ற, 10 கிலோ செம்மறி ஆடு, நேற்று, 5,500 முதல், 6,000 ரூபாய் வரை விற்பனையானது. இதனால், ஆடு வளர்ப்பவர், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, கொண்டலாம்பட்டி ஆட்டுக்கறி வியாபாரி பழனிசாமி கூறுகையில், ''பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சந்தைகளுக்கு ஆடுகளை அதிகளவில் கொண்டுவந்ததால், விலையில் பெரிய அளவு உயரவில்லை. இதனால், கறி விலையில் மாற்றமின்றி விற்கப்படும். சேலம் மாவட்டத்தில் நடந்த ஆட்டுச்சந்தையில், 10 கோடி ரூபாய்வரை, ஆடுகள் விற்பனை நடந்தது,'' என்றார்.
* தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வாரச்சந்தையில் நேற்று, பொங்கலை முன்னிட்டு, ஆடு விற்பனை அமோகமாக நடந்தது. வெள்ள ஆடு, குறி ஆடு, செம்மறி ஆடு என 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று சந்தைக்கு ஆடுகள் வரத்து, வழக்கத்தை விட சற்று குறைவாக வந்ததால், விலை அதிகரித்து காணப்பட்டது. எட்டு கிலோ ஆடு, 5,000 முதல், 12 ஆயிரம் ரூபாய் வரையும், 12 கிலோ ஆடு, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரையும், 15 கிலோ ஆடு, 12 ஆயிரம் முதல், 17 ஆயிரம் ரூபாய் வரையும் என, தரத்துக்கு ஏற்ப விற்பனையானது. கொட்டும் மழையிலும், 30 லட்சம் ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
* தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் நேற்று நடந்த வாரச்சந்தைக்கு, அண்டை மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று, மூன்று கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின. இதேபோன்று, நேற்று நடந்த காரிமங்கலம் வாரச்சந்தையில், ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE