வாஷிங்டன்: 25-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்ய முடியாது என்று துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். ஆனால், தற்போது அதிபராக உள்ள டிரம்ப், தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பதவியை விட்டுக்கொடுக்க தொடர்ந்து மறுத்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக கடந்த 6ம் தேதி அமெரிக்க பார்லி.,யில் டிரம்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிபர் டிரம்பை 25-வது சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதிநிதிகள் சபையும், சபாநாயகருமான நான்ஸி பெலோசி ஆகியோர் துணை அதிபர் பென்ஸை வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், துணை அதிபர் மைக் பென்ஸ், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோஸிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அதில் மைக் பென்ஸ் கூறியிருப்பதாவது: நமது அரசியலமைப்பின்படி, 25-வது சட்டத்திருத்தம் என்பது தண்டனை அளிப்பதோ அல்லது கைப்பற்றுதலோ அல்ல. அதிபர் டிரம்புக்கு எதிராக 25-வது சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி அவரைப் பதவி நீக்கம் செய்வது கொடூரமான முன் உதாரணமாகிவிடும். அது நாட்டின் சிறந்த நலனுக்கு உரியதாக இருக்கும் எனவும், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் நிலைத்தன்மைக்கும் சாதகமாக இருக்கும் என்றும் நான் நம்பவில்லை.

25-வது சட்டத்திருத்தம் என்பது, அதிபர் செயல்முடியாமல் போகும்போதும், திறமையற்றவராக இருக்கும்போதுதான் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன், நீங்கள் 25-வது சட்டத்திருத்தத்தின்படி, ஓர் ஆணையத்தை உருவாக்கவேண்டும் என்று மசோதா தாக்கல் செய்தீர்கள். அதிபர் டிரம்ப் கொரோனாவில் பாதிக்கப்பட்டபோது, அவரின் உடல்நிலை குறித்து அறிவியல்பூர்வமான உண்மைகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறினீர்கள். கடந்த வாரம் பார்லி.,யை நோக்கி நடந்த சம்பவங்களுக்குப்பின், அதிகார மாற்றம் முறையாக நடக்க வேண்டும்.

நாம் நமக்குள் பிளவுபடுத்திக் கொள்ளாமல், சூழலைக் கொதிப்படையச் செய்யாமல் நகர்த்த வேண்டும். பதற்றமில்லாமல் எங்களுடன் பணியாற்றி, நாட்டை ஒற்றுமையாக வைத்திருந்து, அமெரிக்காவின் அடுத்த அதிபராக வர இருக்கும் ஜோ பைடனை வரவேற்போம். நான் தொடர்ந்து என்னுடைய பங்களிப்பை உங்களுக்கு நல்ல முறையில் வழங்குவேன். அதிகாரமாற்றம் முறைப்படி இருக்கும் என்பதை உறுதியளிக்கிறேன். அதிபர் டிரம்ப் பதவிக்காலம் முடிய இன்னும் 8 நாட்கள் இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக 25-வது சட்டத்திருத்தத்தை பயன்படுத்தக் கூறுகிறீர்கள். இது தேசத்துக்கும், நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கும் உகந்ததாக இருக்காது. இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE