பெங்களூரு: 'சங்கல்பா' மாநாடு மூலம், கட்சியை பலப்படுத்த, காங்கிரஸ் திட்டம் வகுத்துள்ளது. ஆனால் மாநில தலைவர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, 'நீ ஒரு பாதை... நான் ஒரு பாதை' என முகத்தை திருப்பி நிற்பது, மேலிடத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா உட்பட, நாட்டின் பல மாநிலங்களில், காங்கிரஸ் வலுவிழந்துள்ளது. பல தேர்தல்களில், கட்சி தோல்வியடைந்தது.கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு, இப்போதே தயாராக வேண்டும். மாநில தலைவர், கட்சி எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவர், ஒருங்கிணைப்புடன் நடக்க வேண்டும் என, கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், மாநில தலைவர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இடையே ஒற்றுமை இருப்பதாக தெரியவில்லை.மாவட்ட, பிளாக் தலைவர்களுடன், ஆலோசனை நடத்துவது; போராட்டங்களுக்கு திட்டம் வகுப்பதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக, தங்களின் தனிப்பட்ட இமேஜை, அதிகரிப்பதில் மட்டும் ஆர்வம் காண்பிக்கின்றனர். இவ்விரு தலைவர்களையும், ஒரே மேடையில் பார்ப்பது அபூர்வமாக உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திய, விவசாயிகளுக்கு எதிரான சட்டம் தொடர்பாக, சித்தராமையா இல்லத்தில், இரு நாட்களுக்கு முன் நடந்த, 'ஐந்து சட்டங்கள் - எண்ணிலடங்கா பொய்கள்' கையேடு வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, சிவகுமாரை அழைக்கவில்லை.'சங்கல்ப' மாநாடு குறித்து, பிளாக், மாவட்ட தலைவர்களுடன், டிச., 29ல், மாநில காங்., அலுவலகத்தில், சிவகுமார் நடத்திய காணொலி கூட்டத்தில், சித்தராமையா பங்கேற்கவில்லை.
நில மறு அறிவிப்பு வழக்கு விஷயத்தில், முதல்வர் எடியூரப்பாவை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்த, விதான்சவுதாவில், சித்தராமையா நடத்திய ஊடகத்தினர் சந்திப்பில், சிவகுமார் இருந்தும் கூட, ஒரு வார்த்தை பேசவில்லை.மாநாடுகளில், முதலில் உரையாற்ற வாய்ப்பு கிடைப்பதில்லை. அனைவரும் பேசி முடித்த பின், வாய்ப்பு கிடைக்கிறது. இரவு வரை அமர்ந்திருந்து, பின் உரையாற்ற மேடைக்கு வந்தால், மாநாட்டில் உள்ளவர்களுக்கு, வீட்டுக்கு செல்லும் அவசரம் இருக்குமே தவிர, தங்களின் பேச்சை கேட்பதில் ஆர்வம் இருக்காது என, காங்., மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE