சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயக்கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டி அருகேயுள்ள நத்தம் கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: அடுத்த 4 மாதத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். தமிழக மக்கள் அதற்கு தயாராகி விட்டனர். கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் நீட் தேர்வை மத்திய அரசால் நுழைக்க முடியவில்லை. ஆனால், தற்போதைய அதிமுக அரசு ஊழல் வழக்குகள் வராமல் தப்பித்து கொள்ளவே, நீட் தேர்வை தமிழகத்தில் வரவழைத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகள் கேட்காமலேயே விவசாயிகள் வாழும் இடம் விவசாயிகளுக்கே உரிமையானது என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்ததும், கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படுவதோடு, பார்லிமென்ட் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மீட்டு தரப்படும்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதல்வர் பழனிசாமி, விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் வகையிலும் வேளாண் சட்டத்தை கையெழுத்திட்டதோடு, வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசி வருவதும் வேதனை அளிக்கிறது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்று, ரத்து செய்யும் வரையில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE