ராசிபுரம்: பொங்கல் பண்டிகையை ஒட்டி, ராசிபுரத்தில் சாலையோரத்தில், 20க்கும் மேற்பட்ட கயிறு கடைகள் வந்துள்ளன. தமிழகத்தில், இன்று போகியுடன் பொங்கல் பண்டிகை தொடங்கியது. நாளை வாசல் பொங்கலும், நாளை மறுநாள் மாட்டுப்பொங்கலும் நடக்கிறது. மாட்டுப்பொங்கல் அன்று, தங்கள் வீட்டில் உள்ள கால்நடைகளை குளிக்க வைத்து, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, புதிய கயிறு மாட்டுவது விவசாயிகளின் வழக்கம். இதற்காக கால்நடைகளுக்கு, புதிய கயிறுகளை வாங்குவார்கள். ராசிபுரத்தில் நேற்று காலை சாலையோரத்தில், 20க்கும் மேற்பட்ட தற்காலிக கயிறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த சின்னப்பம்பட்டி தொழிலாளர்கள், கயிறு உற்பத்தி செய்து, முக்கிய ஊர்களுக்கு சென்று நேரடியாக விற்று வருகின்றனர். ஜோடி கயிறு, 25 ரூபாயிலிருந்து, 80 ரூபாய் வரை விற்பனை செய்தனர். அதுமட்டுமின்றி, மாடு கழுத்துக்கு சலங்கை, பிளாஸ்டிக் பூ மாலை என, அலங்கார பொருட்களையும் விற்றனர். நேற்று காலை முதல், விவசாயிகள் ஆர்வத்துடன் கயிறுகளை வாங்கி சென்றனர். அதேபோல், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, தற்காலிகமாக கரும்பு கடைகளும் போடப்பட்டிருந்தன. கொரோனா காரணத்தால், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என, வியாபாரிகள் கூறினர்.
* மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பள்ளிபாளையம் அடுத்த சில்லாங்காடு பகுதியில், கால்நடைக்கு தேவையான கலர் கயிறுகள், அலங்கார பொருட்கள், சங்கு, சலங்கை, சங்கிலி, மூக்கணாங்கயிறு, நெற்றி கயிறு, வளையம், கலர் கயிறு, அலங்கார பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்தாண்டு பருவமழை பெய்துள்ளதாலும், வாய்க்காலில் தண்ணீர் வந்ததாலும், நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அறுவடை நடந்து வருகிறது. இதனால் இந்தாண்டு, மாட்டுப் பொங்கல் பள்ளி பாளையம் பகுதியில் சிறப்பாக கொண்டாடுவர். காலம் மாறினாலும், கிராமப்புற வாழ்வில் பல மாற்றங்கள் கொண்டு வந்தாலும், தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், மாட்டுப் பொங்கல் கிராமம் தோறும் இன்றளவும், பழமை மாறாமல் கொண்டாடப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE