கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீர் குறைந்துள்ளதால், காவிரியாற்றில் குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் முழுவதும், மழை தொடர்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை, பவானிசாகர் அணை, அமராவதி அணை மற்றும் நொய்யல் ஆற்றின் தண்ணீர், கரூர் அருகே காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மாயனூர் கதவணைக்கு செல்கிறது. கடந்தாண்டு ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் திறக்கப்பட்ட போது நாள்தோறும், 22 ஆயிரம் கன அடி வரை மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வந்தது. பிறகு, படிப்படியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. மேலும், பவானிசாகர், அமராவதி அணையில் இருந்தும் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 6,023 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 700 மணி நிலவரப்படி வினாடிக்கு, 5,983 கன அடியாக குறைந்தது. இதனால், டெல்டா பாசன பகுதிகளுக்கு, காவிரியாற்றில் 5,463 கன அடியும், மூன்று பாசன கிளை வாய்க்காலில், 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
* திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணையில் இருந்து, கடந்த வாரம் மழை காரணமாக வினாடிக்கு, 5,000 கன அடி வரை, ஆறு மற்றும் புதிய வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. நேற்று முன்தினம், வினாடிக்கு அணையில் இருந்து, 1,175 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. புதிய வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, 1,425 கன அடியாக திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 89.24 அடியாக இருந்தது. வினாடிக்கு அணைக்கு, 1,446 கன அடி தண்ணீர் அமராவதி அணைக்கு வந்தது. அணைப்பகுதியில், 39 மி.மீ., மழை பெய்தது.
* கார்வாழி, ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 50 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.43 அடியாக இருந்தது.
மழை விபரம்: கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 6.4, அரவக்குறிச்சி, 30, அணைப்பாளையம், 9, க.பரமத்தி, 3.6, குளித்தலை, 7, தோகைமலை, 3, கிருஷ்ணராயபுரம், 7.2, மாயனூர், 7, பஞ்சப்பட்டி, 10.5, கடவூர், 12, பாலவிடுதி, 20, மயிலம் பட்டி, 17 மி.மி., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 11.6 மி.மீ., மழை பதிவானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE