நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினி வெளியிட்ட அறிக்கை: நான் ஏன் இப்போது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே, விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று, யாரும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம், வற்புறுத்த வேண்டாம்.
'டவுட்' தனபாலு: ஒரு மாதத்திற்கு முன் கூட, 'மாத்துவோம்; எல்லாத்தையும் மாத்துவோம்; இப்போது விட்டால், எப்போதும் இல்லை' என முழங்கிய நீங்கள், இப்போது, இந்த அளவுக்கு வேதனைப்பட, திரைமறைவில் வேறு எதுவும், ஐதராபாத் ஷூட்டிங்கில் நடந்ததோ... ஏனெனில் உங்கள் வார்த்தைகளில் தெரியும் வேதனை தான், இந்த, 'டவுட்'டை கிளப்பியுள்ளது!
பா.ஜ. தேசிய பொதுச் செயலர் ரவி: பொங்கல் விழாவையொட்டி, தமிழக அரசியலில் பெரும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறேன். பெண்களையும், நமது கலாசாரத்தையும் இழிவுபடுத்தும் நபர்களை, இந்த தேர்தலில் மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும். முருக பெருமான் தன் கையில் உள்ள வேல் கொண்டு தாரகாசுரனை அழித்தார். அதே போல, தமிழக மக்கள் ஓட்டு எனும் வேல் கொண்டு, தீய சக்திகள் பதவிக்கு வராமல் தடுக்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: பெண்கள் மற்றும் நம் கலாசாரத்தை இழிவுபடுத்தும் நபர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என எல்லா இடங்களிலும் உள்ளனர். ஆனால், நீங்கள் தமிழக எதிர்க்கட்சிகளை மட்டும் தான் குறிப்பிடுகிறீர்களோ என்ற, 'டவுட்'டை ஏற்படுத்துகிறது. ஒட்டுமொத்த, சிஸ்டமும் மாறணும்; அதற்கு தான் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் இனப்படுகொலையை நினைவு கூறும் நினைவுத் துாணை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஒன்பது தமிழ் மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டதன் பயனாகத் தான் இது சாத்தியமாகியிருக்கிறது. தங்கள் உடலை வருத்தி, இதை சாதித்த மாணவர்களுக்கு பாராட்டுகள்!
'டவுட்' தனபாலு: நடிகர் கமல் ஹாசன் சொன்னது போல, 'நினைவுத் துாண்கள் மண்டபங்களை இடித்து விடலாம். நினைவை அழிக்க முடியாது' என்பது தான் சரி. உங்களைப் போன்ற பெரிய தலைவர்கள், மாணவர்களை தவறாக வழிநடத்தலாமா... இலங்கையில் இப்போது தான் அமைதி திரும்பியுள்ளது. உங்களைப் போன்றவர்களின் பேச்சு, அங்கு அமைதியற்ற நிலையை மீண்டும் ஏற்படுத்தி விடுமோ என்ற, 'டவுட்'டை ஏற்படுத்துகிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE