'அடுத்து எந்த கட்சி ஆட்சி என்பதில், இன்னமும் கட்சித் தலைமைகளுக்கே தெரியாத நிலையில், தி.மு.க.,வுக்கு நீங்கள் காட்டும் ஆதரவு, உங்கள் கட்சியை காலி செய்து விடும் என, மக்கள் பேசிக் கொள்கின்றனரே...' என, சொல்லத் துாண்டும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி: பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில், தி.மு.க.,வின் அழுத்தம் காரணமாகவே குற்றவாளிகளான அ.தி.மு.க., நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இன்னும், நான்கு மாதத்தில், தி.மு.க., ஆட்சி மலர்வது உறுதி. அப்போது குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவர்.
'திராவிடம், திராவிடர்கள் என பேசும் நீங்கள், திராவிடர் கட்சியில் ஒன்றை பாராட்டியும், மற்றொன்றை கிண்டல் செய்தும் பேசுவது சரியா...' என, கேட்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேச்சு: அ.தி.மு.க.,வை உடைக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்கிறது, அ.தி.மு.க., அந்த கட்சியை அவர் ஏன் உடைக்க வேண்டும்... ஒரு கட்சிக்கு, இரு தலைவர்கள் இருப்பரா; ஒரு கட்சிக்கு, இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள் இருப்பரா... இதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை.
'அரசியலுக்காக, எச்.ராஜாவே, தன்னை முழு நேர விவசாயி எனும் போது, ஸ்டாலின், உதயநிதி சொல்ல மாட்டார்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி: தமிழகத்தில் தி.மு.க-.,வை மாதிரி, பொய் பேச யாராலும் முடியாது. உதயநிதி ஸ்டாலின் எத்தனை விவசாயிகளுக்கு உதவியிருக்கிறார்... இவர்கள் என்னமோ விவசாயிகளுக்காக எந்நேரமும் உழைப்பதுபோல் தங்களைச் சித்தரித்துக்கொள்கின்றனர்.
'எல்லை தாண்டிய தீவிரவாதம் என்பது போல, எல்லை தாண்டிய அரசியலாக அல்லவா இது உள்ளது...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: இலவச அரிசி வழங்கல் உட்பட, 30-க்கும் மேற்பட்ட கோப்புகளை, புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி முடக்கியுள்ளார். இவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மக்கள் மத்தியில் அவப் பெயரை ஏற்படுத்த முயற்சிக்கிறார். மத்திய அரசு இவரை உடனே திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.
'மூத்த தலைவரான உங்களை, கட்சி மேலிடம் ஒதுக்கியது தொடர்பாக, லேசான வருத்தம், பேட்டியில் தென்படுகிறதே...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி: கூட்டணி சம்பந்தப்பட்ட பேச்சுகளை, எங்கள் கட்சியின் தேசிய தலைமை தான் குழு அமைத்து நடத்தும். இந்தக் குழுவில், என்னையும் இணைத்துப் பேச்சு நடத்தச் சொல்லி, தேசிய தலைமை உத்தரவிடவில்லை. அதனால், கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE