எனக்கு உயிரை விட மானம் பெரிது!
லட்சுமி ராமகிருஷ்ணன்: சினிமாவுக்கு நான் வந்ததே, ரொம்ப காலம் கடந்து தான். அதாவது, நடுத்தர வயதில் தான் சினிமாவுக்குள் நுழைந்தேன். அதற்கு முன், 22 ஆண்டுகள் வெளிநாட்டில், ஒரு நல்ல பணியில் இருந்தேன். இந்தியாவுக்கு திரும்பியதும், சினிமா வாய்ப்பு கிடைத்ததும், அதை ஒரு மகிழ்வான பணியாகத் தான் செய்தேன்.பிறரைப் போல, வருமானத்திற்காகவோ, வாழ்வாதாரத்திற்காகவோ நான் சினிமாவுக்குள் வரவில்லை. அதனால் தான், எனக்கு பிடித்தால், சினிமாவில் படங்கள் செய்வேன், நடிப்பேன்.
மரியாதை இருந்தால்தான், அதையும் நான் செய்வேன். எனக்கு பிடிக்கவில்லை என்றால், எவ்வளவு பெரிய வாய்ப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். என் அப்பா, அம்மாவுக்கு என் ஒழுக்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாகவே இப்போதும் விளங்கி வருகிறேன். என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒழுக்கத்தை என் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறேன். அதையே என் மூன்று பெண் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்து, உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.மேலும், நான் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை விட, என் கணவர் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அவர் நம்ப மாட்டார்.
என்னைப்பற்றி அவருக்கும் ரொம்ப நல்லா தெரியும்.சினிமாவில் பல சவால்கள் உண்டு. குறிப் பாக சொல்ல வேண்டும் என்றால், நான்கு நல்ல படங்களை இயக்கியுள்ளேன். எனினும், என்னைப் பற்றி கூறும் போது, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணா என்று தான் சொல்வரே தவிர, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணா என சொல்ல மாட்டார்கள். அதற்கு காரணம், நான் பெண் என்பது தான். உயிரை விட, மானத்தை பெரிதாக கருதும் என்னைப் போன்ற பல பெண்கள் சினிமா உலகில் உள்ளனர். அதே நேரம், எல்லா பெண்களும் என்னைப் போன்றவர்கள் என்றும் சொல்ல மாட்டேன். சிலர் தவறாக இருக்கலாம். அதுவும், அவர்களாக தவறாக ஆவதில்லை; ஆக்கப்படுகின்றனர். 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி, இந்த அளவுக்கு பரபரப்பாக பேசப்படும் என நான் நினைக்கவே இல்லை. அந்த நிகழ்ச்சி செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
அந்த நிகழ்ச்சியால் தங்கள் வாழ்க்கை நிலையை மாற்றிக் கொண்ட பலர், இப்போதும் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களில் பலர் என்னை தொடர்பு கொள்ள மறந்தாலும், அவர்கள் எப்படி இருக்கின்றனர் என்பதை அறிய விரும்பி, தொடர்பு கொண்டு பேசி வருகிறேன்.
நானோ, என் குடும்பத்தினரோ ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இல்லை. ஒரு சில சம்பவங்களால் தவறாக அவ்வாறு பேசப்பட்டேன். என் எண்ணம் என்ன என்பதை என் படங்கள் பேசும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE