புதுடில்லி:நாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம், 96.51 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை,வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால், 15 ஆயிரத்து, 968 பேர் பாதிக்கப்பட்டனர்.
சிகிச்சை
இதையடுத்து, வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, நான்கு லட்சத்து, 95 ஆயிரத்து, 147 ஆக உயர்ந்துள்ளது.இதில், இரண்டு லட்சத்து, 14 ஆயிரத்து, 507 பேர், சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பெறுவோர் விகிதம், 2.04 சதவீதமாக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில், 17 ஆயிரத்து, 817 பேர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டனர்.
இதையடுத்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, ஒரு லட்சத்து, 29 ஆயிரத்து, 111 ஆக உயர்ந்துள்ளது. மீண்டோர் விகிதம், 96.51 சதவீதமாக உயர்ந்து உள்ளது.கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனாவால், 202 பேர் உயிரிழந்தனர். இதில், அதிக பட்சமாக, மஹாராஷ்டிராவில், 50 பேர் பலியாகினர். இதேபோல், கேரளாவில், 25; மேற்கு வங்கத்தில், 18; டில்லியில், 16 உயிரிழப்புகளும் பதிவாகின. இதையடுத்து, பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 529 ஆக உயர்ந்துள்ளது.
பரிசோதனை
எனினும், இறப்பு விகிதம், 1.44 சதவீதமாக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில், 8.36 லட்சம் பேருக்கு, கொரோனாவுக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை, 18 கோடியே, 34 லட்சத்து, 89 ஆயிரத்து, 114 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
பாதிப்பு எண்ணிக்கை 102 ஆக உயர்வு
பிரிட்டனில் உருவான, உருமாறிய கொரோனா வைரஸ், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, நம் நாட்டில், பிரிட்டனில் இருந்து வரும் விமான பயணியருக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. இந்நிலையில், நம் நாட்டில், அந்த புதிய வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 102 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும், தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE