புதுடில்லி:கொரோனா ஊரடங்கினால், வாழ்வாதாரத்தை இழந்து தவித்த சிறு வியாபாரிகளுக்கு, டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
போராட்டத்துக்கு ஆதரவான, 'பேட்ஜ்'கள் மற்றும் 'ஸ்டிக்கர்'கள் விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளதை அடுத்து, டில்லி எல்லையில் புதிதாக பல சிறு கடைகள் முளைக்க துவங்கி உள்ளன.
50 நாட்கள்
மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில், கடந்த, 50 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அங்கே குவிந்துள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள், கூடாரங்கள் அமைத்து, சமைத்து சாப்பிட்டு, போராடி வருகின்றனர். இந்நிலையில், டில்லி -- ஹரியானா எல்லையில் அமைந்துள்ள சிங்கூவில், பல சிறிய கடைகள் புதிதாக முளைத்துள்ளன.
இவர்கள், போராட்ட ஆதரவு 'பேட்ஜ்'கள் மற்றும் 'ஸ்டிக்கர்'களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த பேட்ஜ்களை, அனைத்து விவசாயிகளும் வாங்கி அணிந்துள்ளனர்.
ஸ்டிக்கர் விற்பனை
மேலும், டிராக்டர்களில் போராட்ட ஆதரவு வாசகங்கள் அடங்கிய, 'ஸ்டிக்கர்'களை ஒட்டி, வலம் வருகின்றனர். கொரோனா ஊரடங்கினால், வாழ்வாதாரத்தை இழந்து தவித்த பல சிறு வியாபாரிகளுக்கு, இந்த ஸ்டிக்கர் விற்பனை வாயிலாக, மறுவாழ்வு கிடைத்துள்ளது. 'விவசாயமே நம் உயிர், விவசாயிகளை ஆதரிப்போம், விவசாயிகள் ஒற்றுமை ஓங்குக, விவசாயி இல்லையேல்; உணவு இல்லை' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பேட்ஜ்கள், ஸ்டிக்கர்கள் ஆயிரக்கணக்கில் விற்பனை ஆகின்றன. அவை ஒவ்வொன்றும், தலா, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
சட்ட நகலை கொளுத்திகொண்டாடிய விவசாயிகள்
பஞ்சாபில், லோஹ்ரி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. குளிர் காலத்திற்கு விடை கொடுத்து, வசந்த காலத்தை வரவேற்பதே, இந்த பண்டிகையின் நோக்கம். இந்த பண்டிகையின் போது, வீட்டுக்கு வெளியே தீ மூட்டி, மக்கள் அதில் குளிர் காய்வது வழக்கம்.
டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள, புதிய வேளாண் சட்ட நகலை தீயிட்டு கொளுத்தி,லோஹ்ரி பண்டிகையை கொண்டாடினர்.
பா.ஜ., தலைவர்களுக்கு தடை
ஹரியானாவில், முதல்வர், மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., -- ஜனநாயக் ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.கூட்டணி கட்சியின் தலைவர், துஷ்யந்த் சவுதாலா, துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ., மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சியை சேர்ந்த, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர், தங்கள் கிராமங்களுக்குள் நுழைய, ஹரியானாவின், 60 கிராமங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்விரு கட்சி தலைவர்களை புறக்கணிக்க, கிராம சபையினர் கூடி, தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE