சென்னை:தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் செலவுக்கு, அரசிடம், 621 கோடி ரூபாய் ஒதுக்கும்படி, தேர்தல் கமிஷன் கோரியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வரும், 20ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட உள்ளது.அனைத்து மாவட்டங்களிலும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி, ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்கும் பணியும் நடந்து வருகின்றன.
பணப் பட்டுவாடாவை தடுப்பது, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ஆலோசனை நடத்தி உள்ளார்.
கடந்த மாதம், தேர்தல் கமிஷன் பொதுச்செயலர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழுவினர், சென்னை வந்து, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.அப்போது, தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் செலவுக்கு, 621 கோடி ரூபாய் ஒதுக்கும்படி, தமிழக அரசிடம், தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது.
ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, தேர்தல் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால், தேர்தல் செலவுத் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE