பொள்ளாச்சி : பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு, நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில், பொள்ளாச்சி, ஆச்சிபட்டியில் இருந்து, திண்டுக்கல் கமலாபுரம் வரை, 131.96 கி.மீ., தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம், கடந்த, 2018ல் அறிவிக்கப்பட்டது.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மதிப்பு, 3,649 கோடி ரூபாயாகும்.இந்த திட்டத்துக்காக, பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட, 10 கிராமங்களில், 259 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அந்த நிலங்களில் உள்ள, 10 ஆயிரத்து, 95 தென்னைகள் உட்பட, 11 ஆயிரத்து, 936 மரங்கள், நுாற்றுக்கணக்கான வீடுகள், தொழிற்சாலைகள், கட்டடங்கள் அகற்றப்படுகிறது.
நிலம் கையகப்படுத்தும் பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டதில் இருந்தே, பொள்ளாச்சி பகுதியில் உள்ள நில உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வந்தன. குறிப்பாக, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு முன்பே, அனுமதி இன்றி நிலத்தில் அளவீட்டு பணி மேற்கொண்டதற்கு கடும் ஆட்சேபனை எழுந்தது.
இந்நிலையில், நில உரிமையர்களின் ஒப்புதல் இன்றியே, குறைந்த இழப்பீட்டு தொகையை வழங்கி நிலம் கையகப்படுத்த முயல்வதாகவும், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மீறி அதிகாரிகள் செயல்படுவதாகவும், நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்றும், பொள்ளாச்சி, உடுமலை பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்கள் இணைந்து, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து வரும், 18ம் தேதி வரை அவர்களின் நிலங்களை கையகப்படுத்தவோ, பணிகள் மேற்கொள்ளவோ உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வழக்கின் தீர்ப்பை அடுத்தே, நிலம் கையகப்படுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE