கொரோனா ஊரடங்கால் மார்ச் மாதம் கடைசியில் இருந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த கல்வியாண்டு பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 'ஆன்லைன்' வகுப்புகள் கைகொடுத்தன. இந்நிலையில், வரும், 19ம் தேதி முதல், பள்ளிகள் திறந்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி திறப்பு குறித்து பெற்றோர் மனநிலை வருமாறு:
பாதுகாப்பு முக்கியம்
தற்போது மழை பெய்துகொண்டே இருப்பதால், பள்ளிகள் திறப்பது, பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்தும். பத்து வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பினும், மழைக்காலத்தில் நோய்த்தொற்று அதிகம் பரவும் வாய்ப்புள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம். அதனால், பள்ளிகளில் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.பாக்கியலட்சுமி, இல்லத்தரசி, ம.பட்டிணம்.
வரவேற்கத்தக்கது
பள்ளிகளை திறப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்கள் வீட்டிலேயே இருந்து பல நல்ல பழக்கங்களை மறந்தே விட்டனர். பள்ளிகள் திறந்தாலும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும், அரசின் அறிவுறுத்தல்படி தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அப்போது தான், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை மாணவர்கள் முழுமையாக கற்க முடியும்.கல்பனா, இல்லத்தரசி, உடுமலை.
முன்னெச்சரிக்கை அவசியம்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வகுப்புகள் திறப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, முழுவதுமாக பின்பற்ற வேண்டும். வகுப்புகளுக்கு தினமும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மாணவர்கள் வகுப்புக்குள் செல்லும் முன், சோதனை மேற்கொள்ள வேண்டும். 'சானிடைசர்' பயன்படுத்த வேண்டும்.மணியன்,விவசாயி, கடத்துார்.
பள்ளி திறப்பால் மகிழ்ச்சி
ஓராண்டாக பள்ளிகள் திறக்காததால், மாணவர்களின் கற்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. காலை, 6:00 மணிக்கு எழும் நல்ல பழக்கவழக்கங்கள் மாறி விட்டது. கொரோனா பரவல் குறைந்ததால், பள்ளிகளை முன்னெச்சரிக்கையுடன் திறக்கலாம். 'ஆன்லைன்' வகுப்புகளால் குழந்தைகளின் கண்கள் பாதிக்கிறது. பள்ளிகளை திறந்து, பாடங்கள் நடத்துவதை வரவேற்கிறோம்.சுனிதா,இல்லத்தரசி, நெகமம்.
முதலில் தடுப்பூசி!
குழந்தைகளின் பாதுகாப்பு, பெற்றோருக்கு முக்கியம். அரசு அறிவித்துள்ளபடி, முதலில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடட்டும். வகுப்பறைகளில் கொரோனா வைரஸ் பரவல் இல்லாதபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளட்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக இருக்கிறோம். அதுவரை பள்ளிகளை திறக்கக்கூடாது.ஈஸ்வரன்,பெற்றோர், சேரிபாளையம்.
காய்ச்சல் பரிசோதனை!
வால்பாறை மலைப்பகுதியில், கொரோனா அச்சம் மக்களிடையே குறைந்து வருகிறது. எனவே, பள்ளிகள் திறந்து, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் சமூக இடைவெளியுடன் துவங்கலாம். பள்ளிக்கு செல்லும் முன் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தினமும் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். பாதுகாப்பான முறையில் பள்ளிகள் திறப்பதில் தவறில்லை. சதீஸ்,பெற்றோர், வால்பாறை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE