உடுமலை : குடிநீர் ஆதாரமான திருமூர்த்தி அணையில், மிதக்கும் வனவிலங்குகளின், சடலங்களை அகற்ற, வனத்துறையினர் அலட்சியம் காட்டுவதால், நீர் மாசடைந்து வருகிறது.
உடுமலை திருமூர்த்தி அணை வாயிலாக, பி.ஏ.பி., பாசனத்துக்குட்பட்ட, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, உடுமலை நகராட்சி, பூலாங்கிணறு, கணக்கம்பாளையம், குடிமங்கலம், மடத்துக்குளம் உட்பட கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள, அணைக்கு, பாலாறு மற்றும் காண்டூர் கால்வாய் வழியாக நீர் வரத்து உள்ளது. இந்நிலையில், அடர்ந்த வனப்பகுதியில், அமைந்துள்ள, காண்டூர் கால்வாயில், வனவிலங்குகள் தவறி, விழுந்து உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது.
சமமட்ட கால்வாயில், அதிவேகத்தில், வரும் தண்ணீரில், விலங்குகள், அடித்து வரப்பட்டு, அணைப்பகுதியில், அவற்றின் சடலங்கள் தேங்குகின்றன.இவ்வாறு, அணையில், தேங்கியுள்ள நீரில், மிதக்கும், வனவிலங்குகளின், சடலங்கள் குறித்து, வனத்துறையினருக்கு, தகவல் அளிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால், அவற்றை குறித்த நேரத்தில், அகற்றுவதில்லை.
இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், தண்ணீரும், மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, காட்டுப்பன்றி, மான் ஆகியவற்றின் சடலங்கள் அழுகி, கரை ஒதுங்கியுள்ளன. இது, அங்கு வரும் சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.
முக்கிய நீராதாரம் மாசுபடுவதை தடுக்க, வனத்துறை, பொதுப்பணித்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாயில் அடித்து வரப்படும், விலங்குகளின் சடலங்கள் அணைக்குள் வராமல் தடுக்க, கம்பி வலை அமைத்தல் உட்பட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே, இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE