உடுமலை : அறுவடை சீசனில், தேவையான இயந்திரங்களை, வேளாண் பொறியியல் துறை சார்பில், குறைந்த வாடகையில், அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசனத்தில், உடுமலை சுற்றுப்பகுதியில், ஒவ்வொரு சீசனிலும் பல ஆயிரம் ஏக்கரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, பல்வேறு காரணங்களால், விவசாய தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சாகுபடியில், அறுவடை பணிகளை குறித்த நேரத்தில், முடிக்க, விவசாயிகள் திணறுகின்றனர். சாகுபடி பணிகளுக்காக பல்வேறு இயந்திரங்களை பயன்படுத்துவது அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது.
குறிப்பாக, நெல், மக்காச்சோளம் அறுவடையில், இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.தற்போதைய சீசனில், விளைநிலங்களில், நேரடியாக களமிறக்கப்படும் இயந்திரம், பயிர்களில் இருந்து கதிர்களை நேரடியாக பிரித்தெடுப்பதுடன், உலர் தீவனத்துக்கான தட்டுகளை, தனியாக பண்டல் போன்று கட்டி தருகிறது. இதனால், தொழிலாளர் தேவை வெகுவாக குறைகிறது.நெல் சாகுபடியில், நடவு முதல் அறுவடை வரை அனைத்து பணிகளும், இயந்திரத்தால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இயந்திரங்கள் தேவைக்காக, தனியாரை மட்டுமே, விவசாயிகள் நம்பியிருக்கின்றனர்.
தட்டுப்பாட்டை பொறுத்து, இயந்திரங்களுக்கு வாடகையை தனியார் உரிமையாளர்கள் நிர்ணயிக்கின்றனர். எனவே, அறுவடை செலவு அதிகரிக்கிறது.விவசாயிகள் கூறுகையில், 'வேளாண் பொறியியல் துறையில், பெரும்பாலும் மானியத்திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு சீசனிலும், தனியாரால், புதிய இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அறுவடைக்கு உதவியாக உள்ளது. வேளாண் பொறியியல் துறை சார்பில், வட்டாரவாரியாக இயந்திரங்களை ஒதுக்கீடு செய்து, குறைந்த வாடகையில், பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE