உடுமலை : உடுமலை கல்வி மாவட்டத்தில், பள்ளி திறப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவித்துள்ளது.
பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் கருத்துகளை கேட்டதை தொடர்ந்து, பள்ளிகள் வரும், 19ம் தேதி திறக்கப்படும் என, அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மாணவர்களுக்கு உரிய பாதுகாப்புடன் பள்ளி செயல்படுவதற்கு, பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, உடுமலை கல்வி மாவட்டத்தில் தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.
தலைமையாசிரியர்கள் பள்ளி திறப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கு, அலுவலக நேரத்தில் பள்ளியில் இருக்க வேண்டும். பள்ளி வளாகம், கழிப்பறை, வகுப்பறைகளை துாய்மைபடுத்தி, கதவு, ஜன்னல் உட்பட அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.காய்ச்சல் மற்றும் இருமல் இருக்கும் மாணவர்களை, பள்ளிக்கு அனுமதிக்க வேண்டாம். அவ்வாறு இருப்பதை அறிந்தால், சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை பயன்படுத்தி, துாய்மைப்பணிகளுக்கான பொருட்களை பெற்று, நாள்தோறும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.மாணவர்களுக்கு சத்துமாத்திரை மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட இருப்பதால் அவர்களின் எண்ணிக்கை விபரங்களை சுகாதாரத்துறை அலுவலகத்துக்கு வழங்க வேண்டும்.
மதிய உணவை மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து உண்பதை தவிர்க்கவும், உணவு பரிமாறிக்கொள்ளக்கூடாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் இந்த நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கண்காணிக்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE