சென்னை:துாயத் தமிழ் பயன்பாட்டை ஊக்குவிக்க, மூன்று புதிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: பழமையும் சொல்வளமும் நிறைந்த, தமிழ் மொழியில் உள்ள அனைத்து சொற்களையும் திரட்டி, இணையதளத்தில் வெளியிடும் பணியை, தமிழக அரசின் அகரமுதலி திட்ட இயக்ககம் செய்து வருகிறது.மேலும், துாயத் தமிழ் சொற்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், மூன்று புதிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், சொற்குவை மாணவத் துாதுவர் பயிற்சித் திட்டத்தின் வாயிலாக, கல்லுாரி மாணவர்கள் இடையே, சொல்லாக்கத் திறனை வளர்த்தெடுக்கவும், அவர்களின் தனித் தமிழ்ப் பற்றை ஊக்குவிக்கவும், 2 லட்சத்து, 4,600 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில், பல துறைகளில் புதிதாக வரும் கலைச்சொற்களுக்கு இணையான, தமிழ் சொற்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்படும்.
நடைமுறை வாழ்க்கையில், துாயத் தமிழைப் பேசி வரும், தமிழ்ப் பற்றாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மாவட்டத்துக்கு ஒருவர் வீதம், தமிழ் அகராதியியல் நாளில், சான்றிதழ் மற்றும் துாய தமிழ்ப் பற்றாளர் விருது மற்றும், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவை வழங்கப்படும்.இதற்காக, 7.40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், துாய தமிழ்ச் சொற்களை பயன்படுத்தும் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களுக்கு, 'துாய தமிழ் ஊடக விருது' வழங்கப்படும். இத்துடன், 50 ஆயிரம் ரொக்கப் பரிசும், தங்கப் பதக்கமும் வழங்கப்படும்.இதற்காக, 1.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மரபு மற்றும் புதுக் கவிதைகளில் துாய தமிழ் சொற்களை பயன்படுத்தும், இரு கவிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், 'நற்றமிழ்ப் பாவலர்' விருதும் வழங்கப்படும்.இதற்கும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்படும். இதற்காக, 1.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE