அன்னுார் : 'கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னுார் ஒன்றியத்தை சேர்ந்த கதவுகரை, கெம்பநாயக்கன்பாளையம், ஒன்னக்கரசம்பாளையம் உட்பட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கோவை அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு:கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக கற்கள் நடும் பணி, அன்னுார் பகுதியில் தனியார் நிறுவனம் வாயிலாக நடந்து வருகிறது.
வழித்தடத்தில் புதிய புறவழிச் சாலை அமைக்கப்பட்டால், நுாற்றுக்கும் மேற்பட்ட திறந்தவெளி கிணறு, ஆழ்குழாய் கிணறு, வீடுகள், வீட்டுமனைகள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும், பல நுாறு விவசாயிகள் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறும்.இந்த வழித்தடத்தில் பல இடங்களில் அரசின் அங்கீகாரம் பெற்ற மனைகள் உள்ளன. ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பலரும் தங்கள் வாழ்விடங்களை இழக்கும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து கோவை வரை, இதே நெடுஞ்சாலையில் கிணத்துக்கடவில் உயர்மட்ட பாலம் அமைத்துள்ளனர். மேலே இருவழி சாலை, அதற்கு கீழே இருவழி சாலை, என நான்கு வழிச்சாலை அமைத்துள்ளனர்.இதேபோல், அன்னுார் பகுதியிலும் உயர்மட்ட பாலம் அமைப்பதன் வாயிலாக, ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள், 100க்கும் மேற்பட்ட வீடுகள், கிணறுகள், மனையிடங்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
மேலும், கோவையில் இருந்து சத்தி செல்லும் பாதையில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பாதை குறுகலாக உள்ளது. மற்ற இடங்களில் ஏற்கனவே, 100 அடி அகலத்திற்கு பாதை உள்ளது. எனவே, குறுகலாக உள்ள இடத்தில், மட்டும் ஆக்கிரமிப்பை அகற்றி, மற்ற இடங்களில் ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்துவதன் வாயிலாக, கோவை - சத்தி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கலாம். எனவே, புதிய புறவழிச் சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். மனுவை தமிழக முதல்வருக்கும் அனுப்பியுள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தி, அன்னுாரில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கோரும் கூட்டமைப்பு ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE