சூலுார் : ''மழைக்காலத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்,'' என, சூலுார் வட்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது மழை மற்றும் பனிக்காலமாக உள்ளது. இதனால், டெங்கு, மலேரியா உட்பட காய்ச்சல்கள் பரவ வாய்ப்புள்ளது. சூலுார் வட்டாரத்தில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, சுகாதாரத்துறையினர், ஒன்றிய நிர்வாகத்தினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீடு, வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமர் பாரூக் கூறியதாவது:வீட்டில் தண்ணீர் சேகரிக்கும் அனைத்து டிரம்கள், பாத்திரங்களை அடிக்கடி பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.
தரைமட்ட தொட்டி, மேல்நிலை தொட்டியினை மாதம் ஒருமுறை சுத்தப்படுத்துவது அவசியம். தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைப்பது முக்கியம். வீட்டில் உள்ள பழைய டயர்கள், தேங்காய் தொட்டி, இளநீர் மட்டைகளில் தண்ணீர் தேக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும். இதன் வாயிலாக 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க முடியும்.வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
குடிக்கும் தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி பருக வேண்டும். இதனால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்கள் வராமல் தடுக்கலாம். பயன்படுத்தாமல் இருக்கும் ஆட்டுக்கல், உரல்களின் குழியில் மணல் போட்டு நிரம்பவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காய்ச்சல் தொடர்ந்தால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ அல்லது மருத்துவ மனைக்கோ செல்லவேண்டும். போதுமான அளவு தண்ணீர், பழச்சாறு, உப்பு சர்க்கரை கரைசலை அருந்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE